ஹார்முஸ் நீரிணை வழியாக சவுதி அரேபியாவுக்கு சென்றுகொண்டிருந்த பிரிட்டனைச் சேர்ந்த ஸ்டீனா இம்போரா, லிபேரியா நாட்டைச் சேர்ந்த மெஸ்தார் ஆகிய இரு எண்ணெய் கப்பல்களை ஈரான் புரட்சிகர ராணுவப் படை கைப்பற்றியது. இதனால், பாரசீக வளைகுடாவில் நிலவிவரும் பதற்றமான சூழ்நிலை மேலும் அதிகரித்துள்ளது.
இந்நிலையில், இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அமெரிக்க அதிபர் ட்ரம்ப், "நான் தொடர்ந்து கூறிவருவது போல ஈரான் என்றாலே தொல்லைதான். அவர்களுடன் ஒபாமா அரசு போட்டுக்கொண்ட ஒப்பந்தம் (ஈரான் அணுசக்தி) தற்காலிகமானது; கேலிக்குரிய ஒன்று. பிரிட்டனுடன் நாங்கள் தொடர்பில் உள்ளோம்" என்றார்.
பின்னணி:
அமெரிக்கா, ரஷ்யா, சீனா, பிரிட்டன், ஃபிரான்ஸ், ஜெர்மனி, ஈரான் ஆகிய நாடுகளுக்கு இடையே ஜேசிபிஓஏ (JCPOA) என்றழைக்கப்படும் ஈரான் அணுசக்தி ஒப்பந்தம் 2015ஆம் ஆண்டு கையெழுத்தானது.
இந்நிலையில், அந்த ஒப்பந்தத்துக்கு எதிராக ஈரான் செயல்பட்டுவருவதாக குற்றம்சாட்டிய அமெரிக்கா, 2018 மே மாதம் அதிலிருந்து தன்னிச்சையாக வெளியேறியது. அதனைத் தொடர்ந்து, ஈரான் மீது கடுமையான பொருளாதாரத் தடைகளை விதித்து அந்நாட்டுக்கு அழுத்தம் கொடுத்துவருகிறது.
சமீபத்தில், அணுசக்தி ஒப்பந்தத்தில் அனுமதிக்கப்பட்ட அளவைவிட யுரேனியம் செறிவூட்டலை அதிகரிப்பதாக ஈரான் அதிரடியாக அறிவித்தது. இதனால், இருநாடுகளுக்கும் இடையேயான மோதல் மேலும் அதிகரித்துள்ளது.
இம்மாத தொடக்கத்தில், ஜிப்ரால்ட்டர் அருகே ஈரான் எண்ணெய்க் கப்பலை பிரிட்டன் கைப்பற்றியது குறிப்பிடத்தக்கது.