அமெரிக்க அதிபர் தேர்தலுடன் மாகாண மேலவைகளுக்கான உறுப்பினர்களைத் தேர்வுசெய்யும் தேர்தல் நடந்தது. இதுவரை இல்லாத வகையில் முதன்முறையாக மாகாண மேலவை உறுப்பினர்களாக இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர்கள் அதிக அளவில் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.
அந்த வகையில், ஓகையோ மாகாணத்தின் ஆறாவது மாவட்டத்தின் ரோனா ரோம்னே மெக்டேனியல் தலைமையிலான குடியரசுக் கட்சியின் சார்பில் போட்டியிட்ட நிராஜ் அந்தானி கடுமையான போட்டிக்கு இடையே ஜனநாயகக் கட்சி வேட்பாளர் மார்க் ஃபோகலை வீழ்த்தினார்.
தேர்தலில் வெற்றிபெற்ற நிராஜ் அந்தானி, இன்று (ஜன. 05) அதிகாரப்பூர்வமாகப் பதவியேற்றார்.
இது தொடர்பாக தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “இன்று மாநில செனட்டராக அதிகாரப்பூர்வமாகப் பதவியேற்றுள்ளேன். ஓகையோ மாகாண மேலவைக்குச் செனட்ராகத் தேர்வுசெய்யப்பட்ட இந்திய வம்சாவளியைச் சேர்ந்த முதல் நபர் என்ற அடையாளத்தை உண்மையிலேயே பெருமையாகக் கருதுகிறேன்.
ஓகையோ மக்களின் முன்னேற்றத்திற்காக ஒவ்வொரு நாளும் கடுமையாக உழைக்கச் சூளுரைக்கிறேன். இந்தத் தேர்தலில், அமெரிக்காவில் வசிக்கும் இந்தியர்கள், இந்திய பூர்வீகக்குடியினர் தங்கள் வலிமையை நிரூபித்துள்ளனர்.
நான் பிறந்து வளர்ந்த சமூகத்தைப் பிரதிநிதித்துவப்படுத்த முடிந்ததற்கு மிகவும் நன்றியுள்ளவனாக இருக்க கடமைப்பட்டுள்ளேன். எனக்கு வாக்களித்தவர்களுக்கும், ஆதரவாளர்களுக்கும் எனது நன்றி” எனக் குறிப்பிட்டுள்ளார்.
தெற்கு, கிழக்கு, வடக்கு மாண்ட்கோமெரி கவுன்டி ஆகிய பகுதிகளை உள்ளடக்கிய ஓகையோ மாகாணத்தின் ஆறாவது செனட் மாவட்டத்தில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த 87,000-க்கும் அதிகமான மக்கள் வாழ்ந்துவருவது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க : பதற்ற சூழல் - அதிகமான ட்ரோன்களை இயக்கும் ஈரான்