இந்தியாவிற்கும் அமெரிக்காவிற்கும் இடையே நீண்ட காலமாக விவாதிக்கப்படும் ஒரு மினி வர்த்தக ஒப்பந்தம் நவம்பர் 2020 அமெரிக்க ஜனாதிபதி தேர்தலுக்கு முன்னதாக சாத்தியமில்லை என்று முன்னாள் தூதர் நிஷா பிஸ்வால் கருதுகிறார். ஒபாமா நிர்வாகத்தில் பிஸ்வால் தெற்கு மற்றும் மத்திய ஆசியாவின் உதவி வெளியுறவு செயலாளராக இருந்தவர். வாஷிங்டன் டி.சி.யைச் சேர்ந்த மூத்த பத்திரிகையாளர் ஸ்மிதா ஷர்மாவுடன் பேசிய பிஸ்வால், டொனால்ட் டிரம்பின் எச்1பி, எல்1 விசாக்களை இடைநிறுத்தியதையும், எஃப் 1 விசாக்களில் உள்ள சர்வதேச மாணவர்களை முழு செமஸ்டருக்கும் அவர்களது கல்லூரி ஆன்லைனில் பாடம் நடத்தினால் அவர்களை வெளியேறும்படி கட்டாயப்படுத்தியதையும் விமர்சித்தார். அமெரிக்க இந்தியா வர்த்தக கவுன்சிலின் தலைவராக இருக்கும் பிஸ்வால், வேலை இழப்புகள் இருக்கும்போது உள்விவகாரங்களில் கவனம் செலுத்துவது அல்லது புலம்பெயர்ந்தோரைத் குறிவைப்பது போன்றவை அமெரிக்க சமுதாயத்திற்கும் பொருளாதாரத்திற்கும் பாதகமானது என்று வாதிட்டார். இந்த பிரத்யேக உரையாடலில், இந்தியாவில் 10 பில்லியன் அமெரிக்க டாலர் வரை முதலீடு செய்வதற்கான கூகுளின் முடிவைப் பற்றி கேட்டபோது, கோவிட் காலத்திற்குப் பிந்தைய காலத்தில் டிஜிட்டல் பொருளாதாரம் தான் எதிர்காலம் என்றும், இந்தோ-அமெரிக்க வர்த்தகம் அடுத்த பல ஆண்டுகளில் விரிவடைவதற்கு இந்தியாவில் நிலையான கொள்கை கட்டமைப்புகள் தேவைப்படும் என்றும் பிஸ்வால் சுட்டிக் காட்டினார். உரையாடலின் தமிழாக்கம் இதோ.
கே- இந்தோ-அமெரிக்க வர்த்தக ஒப்பந்தம் விரைவில் கையெழுத்தாகும் என்று நினைக்கிறீர்களா?
மினி வர்த்தக ஒப்பந்தம், அமெரிக்காவின் வர்த்தக பிரதிநிதிகள் நிறுவனத்தில் USTR உள்ள தூதர் லைட்ஹைசர் மற்றும் அவரது குழுவினருக்கும் வர்த்தக அமைச்சகத்தின் பியூஷ் கோயலுக்கும் அவரது குழுவினருக்கும் இடையில் பல கட்ட பேச்சுவார்த்தைகளுக்கு உட்பட்டது. இந்த பேச்சுவார்த்தைகள் நடந்து கொண்டிருக்கின்றன, மேலும் அந்த பிரச்சினைகள் தள்ளி வைக்கப்படுமா என்று பார்க்கிறார்கள். தேர்தல் எவ்வளவு நெருக்கமாக வருகிறதோ, அதற்கு முன்பு நீங்கள் ஏதேனும் சிலவற்றை மட்டுமே பெற முடியும், ஆனால் அதற்கு முன்பு அவர்களால் அதைச் செய்ய முடிந்தால் நான் மிகவும் மகிழ்ச்சியுடன் ஆச்சரியப்படுவேன். மினி ஒப்பந்தத்தை விரைவில் செய்து முடிப்பது அமெரிக்கா மற்றும் இந்தியாவின் நலனுக்கு நன்மை பயப்பதாக இருக்கும்.
கே- அமெரிக்க-சீனா வர்த்தக துண்டிப்பு மற்றும் கட்டுப்பாட்டு எல்லைகோடு பகுதியில் இந்தியா-சீனா பதட்டங்கள் ஆகியவற்றுக்கு இடையே இந்தோ-அமெரிக்க வர்த்தகத்திற்கான வாய்ப்பு பகுதிகள் யாவை?
அத்தியாவசிய மருந்துகள், பாதுகாப்பு, உயர் தொழில்நுட்பம், உள்கட்டமைப்பு போன்ற முக்கிய பகுதிகளில் இந்தியாவில் விநியோகச் சங்கிலி மற்றும் உற்பத்தியில் அதிக கவனம் செலுத்துவதற்கு இந்தியாவும் அமெரிக்காவும் நமது பொருளாதார கூட்டணியை விரிவுபடுத்துவதற்கான வாய்ப்புகள் உள்ளன. அந்தத் தொழில்களைக் கட்டமைப்பதில் நம்பகமான கூட்டாளியை நாங்கள் எதிர்பார்க்கும் பகுதிகள் அவை. சீனா எப்போதுமே இந்தியாவிற்கும் அமெரிக்காவிற்கும் மிக முக்கியமான பொருளாதார கூட்டாளியாக இருக்கும், அதை மாற்றவோ குறைத்து மதிப்பிடவோ யாரும் முயற்சிக்கவில்லை.
ஆனால் விநியோகச் சங்கிலிகளில் அதிக பன்முகத்தன்மை மற்றும் சில துறைகளில் ஆபத்து ஏற்படுவது போன்றவற்றில் நிலையான, கவர்ச்சிகரமான மற்றும் முதலீட்டை ஊக்குவிக்கும் விதமாக இந்தியாவில் கொள்கை கட்டமைப்பைக் உருவாக்க வேண்டும். குறுகிய காலத்தில் நிறுவனங்கள் தங்கள் இருப்புநிலைக் குறிப்பில் நிறைய நட்டங்களை எதிர்கொள்கின்றன என்பதனை பற்றிய ஆதங்கம் இது. நீங்கள் பெரிய முதலீடுகளைச் செய்ய உகந்த நேரம் இதுவல்ல. அடுத்த பல ஆண்டுகளில் அமெரிக்க-இந்தியா பொருளாதார வழித்தடத்தை உறுதிப்படுத்தும் வகையில் மாற்றம் செய்ய முயற்சிப்பது பற்றி நாங்கள் பேசுகிறோம்
கே- கல்வான் மோதல்களுக்குப் பிறகு, சில சீனப் பொருட்களை இறக்குமதி செய்வதற்கான தடையை இந்திய அறிவித்ததால், துறைமுகங்களில் குழப்பத்திற்கு வழிவகுத்தது. அமெரிக்க-இந்தியா உத்திசார் கூட்டமைப்பு USISPF இது அமெரிக்க உற்பத்தி நிறுவனங்களையும் பாதிக்கும் என்று கூறியுள்ளது. இதனை பற்றிய உங்கள் கருத்துக்கள் என்ன?
இவை மிகவும் சிக்கலானது மற்றும் நுணுக்கமானது. இந்திய அரசாங்கம் எதிர்கொள்ளும் பாதுகாப்பு சிக்கல்களை நாங்கள் புரிந்துகொள்கிறோம். தேசம், குடிமக்கள் மற்றும் இந்திய விநியோகச் சங்கிலிகளைப் பாதுகாப்பதற்கான அவர்களின் தேவையை நாங்கள் பாராட்டுகிறோம், ஆதரிக்கிறோம்.ஆனால், நாம் மிகவும் ஒருங்கிணைந்த உலகப் பொருளாதாரத்தில் வாழ்கிறோம், எனவே வேண்டுமென்றே செயல்படுவதனால் சந்திக்ககூடிய எதிர்பாராத சில விளைவுகளை பற்றி சிந்திப்பதும் முக்கியம்.
கே- கூகுள் நிறுவனத்தின் சுந்தர் பிச்சை இந்தியாவின் டிஜிட்டல் பொருளாதாரத்தை துரிதப்படுத்த உதவும் புதிய 10 பில்லியன் டாலர் டிஜிட்டல் மயமாக்கல் நிதியை அறிவித்துள்ளார். மேலும் அதிகமான அமெரிக்க நிறுவனங்கள் இதில் நுழையும் என நீங்கள் நினைக்கிறீர்களா?
நிச்சயமாக. டிஜிட்டல்மயமாதல் தான் எதிர்காலம், டிஜிட்டல் பொருளாதாரம் என்பது வேகமானது. தொற்றுநோய் உண்மையில் டிஜிட்டல்மயத்தை நோக்கிய நமது நகர்வை கணிசமாக துரிதப்படுத்தியுள்ளது. எதிர்கால பொருளாதாரத்தை ஆதரிக்க டிஜிட்டல் கட்டமைப்பை உண்மையில் விரிவுபடுத்துவதற்காக 5 ஜி உள்கட்டமைப்பில் ஒத்துழைப்பது பற்றி சுந்தர் பிச்சை, மைக்ரோசாப்ட் மற்றும் இந்திய தொழில்நுட்ப நிறுவனங்கள் ஆகியோர் பேசியது மற்றும் அவற்றில் அணுகும் விதங்களை விரிவாக்குவது பற்றி கூகுள் பேசியது ஆகியவை அமெரிக்க-இந்தியா இரு சந்தைகளுக்கும் இடையிலான ஒத்துழைப்புக்கான முக்கியமான வாய்ப்புகள் மூலம் விநியோகிப்பவர்கள் மற்றும் தயாரிப்பாளர்களுக்கு அணுகலை வழங்க முடியும்.
கே- எச்1பி, எல்1 விசாக்களின் இடைநீக்கம் டிசம்பருக்கு அப்பால் நீட்டிக்கப்படலாம் என நினைகிறீர்களா?, அது சிலிக்கான் பள்ளத்தாக்கை எந்தளவு பாதிக்கும் என்று நீங்கள் நினைக்கிறீர்கள்?
இது தவறாக வழிநடத்தப்பட்ட கொள்கை என்று அமெரிக்க தொழில் வர்த்தக சங்கத்தின் தலைமை நிர்வாக அதிகாரி டாம் டோனோஹூ மிகவும் ஆணித்தரமாகவும் காட்டமாகவும் பேசியுள்ளார். உண்மையில் இதன் மூலம், அமெரிக்கா, அமெரிக்க நிறுவனங்கள் மற்றும் அமெரிக்காவில் தொழிலாளர்களை முதலீடு செய்வதை பாதிக்கும். கடந்த பல ஆண்டுகளாக எங்கள் நாட்டிற்கு வந்த மக்களால், அவர்கள் ஒரு நல்ல வாழ்க்கையைத் தேடும் நிரந்தர குடியேறியவர்களாகவோ அல்லது உயர் கல்வியைத் தேடும் வெளிநாட்டு மாணவர்களாகவோ அல்லது அமெரிக்க பொருளாதாரத்தில் குறுகிய கால தேவைகளுக்கு உதவ தற்காலிக வேலை விசாக்களில் வருகிறார்களோ என்பதைப் பொறுத்து ஒரு தேசமாக நாங்கள் பயனடைந்துள்ளோம். இந்த மக்கள் அமெரிக்காவின் பொருளாதார உயர்வுக்கும், எமது தொழில் முனைவோர் மனப்பான்மைக்கும், புதுமையை கண்டுபிடிக்கும் திறனுக்கும் பெரிதும் பங்களித்துள்ளனர். உலகெங்கிலும் உள்ள மிகச் சிறந்த மற்றும் பிரகாசமான பலர் அமெரிக்காவிற்கு வர விடாமல் தடுக்கும் இந்த குடிவரவு கொள்கைகளால் அந்த திறமைகளை எங்கள் நாட்டிற்கு பயன்படாமல் மற்ற நாடுகளுக்கு பயனளிக்குமாறு செய்யும்.
கே- சுமார் இரண்டு லட்சம் இந்தியர்களை பாதிக்கக்கூடிய எஃப்1 விசாக்கள் குறித்த அறிவிப்புக்கு எதிர்வினையாற்றிய டோனோஹூ, இது அமெரிக்க பொருளாதாரத்தில் ஒரு "உறைநிலையை" ஏற்படுத்தும் என்று கூறினார். டிரம்ப் நிர்வாகம் ஏன் இது போன்ற நிலையை எடுத்தது?
கொள்கைகளை வெளியிடுவதில் நிர்வாகத்தின் நோக்கத்தைப்பற்றி என்னால் பேச முடியாது. இது ஒரு தொற்றுநோய் காலத்தில் உடல்நலம் மற்றும் பொருளாதார தாக்கங்களைச் பற்றிய அச்சம்,கவலைகள் ஆகியவற்றை கையாளும் காலம். உங்களிடம் பல வேலை இழப்புகள் இருக்கும்போது, உள்விவகாரங்களில் செல்வதற்கான போக்குகள் உள்ளன, அவை செய்யகூடாத தவறான விஷயம் என்று நாங்கள் கருதுகிறோம். ஆனால் இது பல நாடுகளால் புரிந்துகொள்ளக்கூடிய மற்றும் வெளிப்படும் ஒரு உள்ளுணர்வு. உலகெங்கிலும் உள்ள நாடுகளுடனும் எங்கள் கூட்டாளிகளுடனும் நாங்கள் மிகவும் ஒத்துழைப்புடன் இணைந்திருக்கும்போது நாங்கள் அனைவரும் சிறப்பாக செயல்படுகிறோம். எங்கள் சந்தைகள், ஆதாரங்கள் மற்றும் திறமைகள் உலகளாவியவை, மேலும் இந்த கட்டத்தில் உள்விவகாரத்தில் திரும்பி தடைகளை ஏற்படுத்த முடியாது.
கே- கோவிட் பிந்தைய உலகில் இந்தோ அமெரிக்க ஒத்துழைப்பு குறித்து நிர்மலா சீதாராமன், ஜெய்சங்கர், பாம்பியோ ஆகியோர் பங்கேற்கும் அமெரிக்க-இந்தியா வர்த்தக சபை (USIBC) ஏற்பாடு செய்துள்ள ஐடியாஸ் இந்தியா உச்சி மாநாடு அடுத்த வாரம் நடைபெற இருக்கிறது. அதற்கான சில யோசனைகள் என்னென்ன?
இந்த ஆண்டு உச்சிமாநாட்டின் கருப்பொருள் ஒரு சிறந்த எதிர்காலத்தை உருவாக்குவது என்பதாகும். தற்போதைய நிலைமையில் பொருளாதாரம் காரணமாகவோ அல்லது புவிசார் அரசியல் காரணமாகவோ அல்லது நமது வாழ்க்கை மற்றும் வேலை முறைகளுக்கு ஆழ்ந்த இடையூறு விளைவிக்கும் ஒரு காலத்தின் மத்தியில் நாம் இருக்கிறோம். ஆயினும், இந்த சீர்குலைவு நேரத்தில், நாம் ஒரு புதிய யுகத்தைக் கொண்டுவருவதற்கான கூட்டத்தில் இருக்கிறோம். அந்த புதிய சகாப்தம் எதைக் குறிக்கும் என்பது நம் கையில் உள்ளது.
ஐடியாஸ் உச்சி மாநாடு
அமெரிக்காவும் இந்தியாவும் பொருளாதாரத்தின் எதிர்காலத்திற்காக எவ்வாறு இணைந்து செயல்படுகிறது என்பது பற்றியது. பாதுகாப்பு கூட்டாண்மை என்பது வர்த்தகத்தின் கடல் பாதைகளைத் திறந்த நிலையில் வைத்திருப்பது அல்லது நாம் மதிக்கும் மதிப்புகள் மற்றும் விதிமுறைகளைப் பற்றி பேசும் உத்திசார் உறவுகளை சரிசெய்வது போன்றவை உலகளாவிய அரங்கில் அல்லது தொழில்நுட்பத் துறையில் உருவாகும் புதிய சகாப்தத்தில் புதிய தலைவர்களால் அவை நிகழும்.
இதையும் படிங்க: ராஜ்நாத் சிங் தலைமையில் எஸ்.டி.ஏ. கவுன்சில் கூட்டம்