அமெரிக்க அதிபர் தேர்தலுக்கு இன்னும் ஒரு மாதத்திற்கும் குறைவான நாட்களே உள்ள நிலையில் ஜனநாயகக் கட்சி, குடியரசு கட்சி என இரு கட்சிகளும் தங்கள் பரப்புரைகளை தீவிரப்படுத்தி உள்ளன.
இந்நிலையில், ஜனநாயகக் கட்சியின் துணை அதிபர் வேட்பாளர் கமலா ஹாரிஸை கடுமையாக விமர்சித்துள்ள ட்ரம்ப், ஜோ பிடன் அதிபர் தேர்தலில் வெற்றி பெற்றால் ஒரே மாதத்தில் அவரை ஓரங்கட்டிவிட்டு கமலா ஹாரிஸ் அதிபர் ஆகி விடுவார் என்று கூறியுள்ளார்.
இது குறித்து ஃபாக்ஸ் செய்தி நிறுவனத்திற்கு அதிபர் ட்ரம்ப் அளித்துள்ள பேட்டியில், "அவர் (கமலா ஹாரிஸ்) ஒரு கம்யூனிஸ்ட். அவள் ஒரு சோஷலிஸ்ட் அல்ல.
துணை அதிபருடனான விவாதத்தில் அவர் கூறிய கருத்துக்களை கேளுங்கள். கொலைக்காரர்களையும் குற்றவாளிகளையும் நம் நாட்டில் அனுமதிக்கும் வகையில் அனைத்து நாடுகளுக்கும் நமது எல்லையைத் திறக்க வேண்டும் என்று அவர் கூறுகிறார்.
வரும் நவம்பர் 3ஆம் தேதி நடைபெறும் அதிபர் தேர்தலில் ஜனநாயகக் கட்சி வெற்றி பெற்றால் ஒரே மாதத்தில் ஜோ பிடனை ஓரங்கட்டிவிட்டு கம்யூனிஸ்ட் கமலா ஹாரிஸ் அதிபர் ஆகிவிடுவார். எனவே நாம் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்" என்று ட்ரம்ப் விமர்சித்துள்ளார்.
நவம்பர் 3ஆம் தேதி நடைபெறும் அமெரிக்க அதிபர் தேர்தலில் குடியரசுக் கட்சி சார்பில் தற்போது அதிபராக உள்ள ட்ரம்ப் மீண்டும் போட்டியிட உள்ளார். அவரை எதிர்த்து முன்னாள் அமெரிக்க துணை அதிபர் ஜோ பிடன் களம் காண்பது குறிப்பிடத்தக்கது.