அமெரிக்க அதிபர் தேர்தல் நவம்பர் 3ஆம் தேதி நடைபெறவுள்ளது. இத்தேர்தலில் குடியரசு கட்சி சார்பில் அதிபர் ட்ரம்ப் இரண்டாவது முறையாக போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து ஜனநாயகக் கட்சி சார்பில் ஜோ பிடன் போட்டியிடுகிறார்.
தற்போதுவரை வெளியான கருத்துக்கணிப்புகளில் ஜனநாயகக் கட்சியினரே முன்னணியில் உள்ளனர். தேர்தலுக்கு இன்னும் 10க்கும் குறைவான நாள்களே உள்ள நிலையில், ட்ரம்ப் தனது பரப்புரைகளைத் தீவிரப்படுத்தியுள்ளார்.
இந்நிலையில், முன்கூட்டியே வாக்களிக்கும் முறையை பயன்படுத்தி அதிபர் தேர்தலில் ட்ரம்ப் நேற்று வாக்களித்தார். கரோனா பரவல் காரணமாக முன்னெப்போதும் இல்லாத வகையில், இதுவரை சுமார் 55 லட்சம் அமெரிக்கர்கள் முன்கூட்டியே வாக்களிக்கும் முறையை பயன்படுத்தி வாக்களித்துள்ளனர்.
புளோரிடா மாகாணத்திலுள்ள நூலகம் ஒன்றில் வாக்களித்த ட்ரம்ப், செய்தியாளர்களிடம் பேசுகையில், "இங்கு வாக்குப்பதிவு பாதுகாப்பாக நடக்கிறது. நீங்கள் வாக்கை தபாலில் அனுப்புவதைவிட இது பாதுகாப்பானது. அதை என்னால் உறுதியாகச் சொல்ல முடியும்" என்றார்.
அமெரிக்க அதிபர் ட்ரம்ப், எவ்வித ஆதாரமும் இன்றி தபால் வாக்குகளில் முறைக்கேடு நடக்கலாம் என்று தொடர்ந்து குற்றஞ்சாட்டிவருவது குறிப்பிடத்தக்கது.
மேலும், நீங்கள் யாருக்கு வாக்களித்தீர்கள் என்று செய்தியாளர்கள் கேட்டதற்கு, "நான் ட்ரம்ப் என்ற நபருக்கு வாக்களித்தேன்" என்று சிரித்துக்கொண்டே கூறினார்.
வாக்களித்த பின், மூன்று முக்கிய மாகாணங்களில் நடைபெற்ற பரப்புரை கூட்டத்தில் ட்ரம்ப் பங்கேற்றார்.
இதையும் படிங்க: அமெரிக்க அதிபர் தேர்தல்: டிவி விளம்பரச் சந்தைக்கு அடித்த லாட்டரி