அமெரிக்காவில் லூசியானா மாகாணத்தில் பொன்சார்ட்ரெய்ன் ஏரியின் அருகே வசித்து வருகின்றனர் ஜெனிபர்- டேலி தம்பதி. இவர்களுக்கு 12 வயதில் ஜூலியட் என்ற மகளும், 5 வயதில் மகனும் உள்ளனர். மிகவும் மகிழ்ச்சியுடன் சென்ற இவர்களின் வாழ்க்கையில் திடீரென்று அடித்தது கரோனாப் புயல்.
இதுகுறித்து ஜூலியட்டின் தாயார் ஜெனிபர் கூறுகையில், "ஜூலியட்டுக்கு உடல்நிலை திடீரென்று மோசமானதால், அருகிலிருக்கும் நியூ ஆர்லியன்ஸ் மருத்துவமனையில் (New Orleans hospital) அனுமதித்தோம். அவளைப் பரிசோதித்த மருத்துவர்கள், ஜூலியட்டுக்கு கரோனா தொற்று இருப்பதை உறுதி செய்தனர். ஆனால், மற்றவர்களைப் போல், கரோனா அறிகுறிகள் இல்லாமல் சற்று வித்தியாசமாக வயிற்று வலியும், வாந்தியும் ஏற்பட்டது. மேலும், ஜூலியட்டின் உதடுகள் முழுவதும் நீல நிறமாகவும் மாறியது மட்டுமின்றி கால்கள் முழுவதும் குளிர்ச்சியாக மாறின.
எமர்ஜென்சி வார்ட்டுக்கு எனது மகளை உடனடியாக மருத்துவர்கள் அழைத்து சென்றனர். ஆனால், யாரும் எதிர்பார்க்காத வகையில் ஜூலியட்டுக்கு திடீரென்று நெஞ்சு வலி ஏற்பட்டது. உடனடியாக சிபிஆர் (Cardiopulmonary resuscitation) செய்து கடைசி நம்பிக்கையாக ஓச்ஸ்னர் மருத்துவ மையத்திற்கு அழைத்து சென்றனர். அங்கிருந்த மருத்துவர் க்ளீன்மஹோன் (Kleinmahon) என்பவரின் அதீத முயற்சியால் என் மகள் உயிருடன் மீட்கப்பட்டார். மேலும் அவர் சுமார் 10 நாள்கள் தொடர் கண்காணிப்பில் பத்திரமாகவும் பார்த்துக்கொண்டார்" எனத் தெரிவித்தார்.
இதுகுறித்து மருத்துவர் க்ளீன்மஹோன் கூறுகையில், "கரோனா பாதிப்பில் மிகவும் மோசமான நிலைமையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவள் ஜூலியட். அவளுடைய இதயத்தின் மேற்பகுதி, கீழ் பகுதியுடன் இணைந்து சரியாக வேலை செய்யவில்லை. இதனால், அவளுக்கு பல உறுப்புக்கள் கொஞ்சம் கொஞ்சமாக செயலிழக்க தொடங்கின.
கரோனா அறிகுறிகள் முற்றிலுமாக ஜூலியட்டுக்கு மாறுபட்டதால், மருத்துவ சிகிச்சைக்கே பெரிய சவாலாக தான் இருந்தார். சுவாச பிரச்சனைக்கு உள்ளான ஜூலியட்டை சுமார் நான்கு நாள்கள் வென்டிலேட்டரில் தான் வைத்திருந்தோம். மருத்துவர்களின் அதீத கவனிப்பால் ஜூலியட் சொந்தமாக சுவாசிக்கும் தன்மையை அடைந்தார். தற்போது, ஜூலியட் கரோனாவிலிருந்து முழுவதும் குணமாகி வீட்டிற்கு புன்னகையுடன் திரும்பியுள்ளார்" என்றார்.
மேலும், ஜூலியட்டின் பெற்றோர் கூறுகையில், ஜூலியட் சுயநினைவுக்கு வந்த பிறகு என்னிடம் அனைத்து விவரங்களையும் கேட்டு ஆச்சரியம் அடைந்தார். கரோனா வைரசால் பாதிக்கப்பட்ட எனது மகளைப் போல் யாரும் பாதிப்பு அடைந்திருக்க மாட்டார்கள். சரியான நேரத்தில் மருத்துவமனைக்கு அழைத்து சென்ற காரணத்தினால் தான், அவள் இன்று உயிருடன் என் முன்பு நடமாடி கொண்டிருக்கிறாள்" என மகிழ்ச்சியுடன் தெரிவித்தனர்.
சிறு வயதில் இறப்பின் உச்சத்திற்கு சென்று கால் பதித்து திரும்பி வந்த ஜூலியட்டின் வாழ்க்கைக் கதை பலரையும் வியப்பில் ஆழ்த்துவது மட்டுமின்றி கரோனாவுக்கு எதிராக போராடுவர்களுக்கு தன்னம்பிக்கை ஏற்படுத்தும் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை.
இதையும் படிங்க: கரோனா வைரஸால் கல்லறைகளின் தேசமான பிரேசில்!