அமெரிக்க முன்னாள் அதிபர் பாரக் ஒபாமா, “எ பிராமிஸ்ட் லாண்ட்” என்ற தலைப்பில் நினைவுக்குறிப்பு எழுதியுள்ளார். இரு பகுதிகளாக உருவாக்கப்பட்டு அந்த நூலில் முதல் பகுதி இன்று வெளியாகி உள்ளது.
இந்த நூலில், 2008ஆம் ஆண்டில் நடந்த அமெரிக்க அதிபர் தேர்தலுக்கான அவரது பரப்புரையில் தொடங்கி அதிபராக அவர் பதவி வகித்த காலம் வரையிலான நிகழ்வுகளை விரிவாக விவரித்துள்ளதாக அறியமுடிகிறது.
அதில், இந்தியா குறித்து தனது கருத்துகளை ஒபாமா குறிப்பிடுகையில், "உலகின் மக்கள் தொகையில் பெரும் எண்ணிக்கையிலான மக்கள் வாழும் நாடான இந்தியா குறித்து எனக்கு பல விஷயங்கள் பிரமிப்பை மட்டுமே அளித்தன.
இரண்டாயிரத்துக்கும் மேலான தனித்துவமான இனக்குழுக்கள், 700-க்கும் மேற்பட்ட மொழிகள், பல்வேறு பண்பாடு பழக்க வழக்கங்கள் கொண்ட நாடு இந்தியா.
2010ஆம் ஆண்டுக்கு முன்னர் இந்தியாவிற்கு நான் வந்ததில்லை. இருப்பினும், எனது மனத்தில் இந்தியாவைப் பற்றி சிறப்பான உருவகம் ஒன்று எப்போதும் இருந்தது. காரணம் மகாத்மா காந்தியடிகள்.
ஆபிரகாம் லிங்கன், மார்ட்டின் லூதர் கிங் நெல்சன் மண்டேலா ஆகியோரை படித்த எனக்கு காந்தியின் சிந்தனைகள் மட்டும் அத்தனை ஆழமாகப் பாதித்திருந்தது. இந்தியா மீதான என் மோகம் காந்தியடிகளால் தோன்றியது.
இளைஞனாக இருந்தபோது, நான் அவருடைய எழுத்துகளைப் படித்தேன். என் ஆழ்ந்த உள்ளுணர்வுகளுக்கு அவரது குரல் நீக்கமற ஒலித்துக்கொண்டே இருந்தது.
சத்தியாகிரகம் என்பதை மனசாட்சியைத் தூண்டுவதற்கான ஆற்றலாகவே நான் கண்டேன். அனைத்து மதங்களின் ஒற்றுமையை உருவாக்க அவர் போதித்த அறமும், மனிதர்களின் மாந்தநேயப் பண்பை வளர்க்க விதைத்த அன்பும், அனைவரும் சமம் என்பதை உறுதிசெய்ய போராடிய தீரமும் என்னை வெகுவாகப் பாதித்தன.
காந்தியின் நடவடிக்கைகள் அவரது சொற்களைவிட என்னை மேலும் பாதித்தன. அவர் தனது உயிரைப் பணயம் வைத்து, சிறைக்குச் சென்று, இந்திய மக்களின் போராட்டங்களுக்கு வலுவூட்டினார்.
பிரிட்டனிடம் அடிமைப்பட்டுக் கிடந்த இந்தியாவின் சுதந்திரத்திற்காக 1915ஆம் ஆண்டில் தொடங்கிய அவரது விடுதலைப்போராட்டம் 30 ஆண்டுகளுக்கும் மேலாக தொடர்ந்தது.
அந்தப் போராட்டம் துணைக் கண்டத்தின் பெரும்பகுதியை விடுவிக்க மட்டும் உதவவில்லை. மாறாக உலகம் முழுவதும் விடுதலைக்கான போராடும் மக்களுக்கு நம்பிக்கை ஊட்டியது. ஜிம் க்ரோ தெற்கில் உள்ள கறுப்பின அமெரிக்கர்கள் உள்ளிட்ட ஒடுக்கப்பட்ட, நசுக்கப்பட்ட, ஓரங்கட்டப்பட்ட மக்களுக்கு ஒரு கலங்கரை விளக்கமாக மாறியது.
எனது போராட்டத்தின் ஆன்ம முகமாக காந்தி இருந்தார்; இன்றும் இருக்கிறார்; என்றும் இருப்பார். எனது வாழ்வில் காந்திக்கு அதிகமான பங்கு இருக்கிறது.
இந்து இந்தியா மற்றும் பெரும் இஸ்லாமிய பாகிஸ்தான் என இந்தத் துணைக்கண்டம் இரு நாடுகள் பிரிக்கப்படுவதை அவரால் தடுக்க முடியவில்லை. அது ஓர் பெரும் நில அதிர்வு நிகழ்வாகும்.
குறுங்குழுவாத வன்முறை, மில்லியன் கணக்கான குடும்பங்களின் இடப்பெயர்வு எனத் தொடர்ந்த அந்தப் பெருஞ்சோகம் சொல்லால் சொல்லி மாளாது.
அந்தப் பெருஞ்சோகம் அவரை வாட்டியது. அவர் சோர்ந்து போய்விடவில்லை. அமைதியை, சகோதரத்துவத்தை, அன்பைப் பரப்ப அவர் தொடர்ந்து போராடினார். அவர் தனது எழுபது வயதுகளில் அதற்காகப் பரப்புரை செய்தார்; உண்ணாவிரதம் இருந்தார்.
1948ஆம் ஆண்டு ஜனவரி 31ஆம் தேதியன்று ஒரு இளம் இந்து தீவிரவாதியால் அவர் சுட்டுக்கொல்லப்பட்ட அந்த இறுதி நாள் வரை போராட்டத்தோடு வாழ்ந்த அவரது வாழ்வே நமக்கும் பெரும்பாடம்" எனத் தெரிவித்துள்ளார்.