அமெரிக்காவின் மினியாபோலிஸ் நகரில் காவலர் ஒருவரின் பிடியில் ஆப்பிரிக்க அமெரிக்கர் உயிரிழந்த சம்பவத்தின் வீடியோ இணையத்தில் பரவிவருகிறது. அதில் நகரின் நடு ரோட்டில் ஆப்பிரிக்க அமெரிக்க ஒருவரை, மினியாபோலிஸ் நகரின் காவலர் ஒருவர் மூச்சுவிட முடியாத வகையில் நீண்ட நேரமாகப் பிடித்து வைத்துள்ளார்.
அந்த ஆப்பிரிக்க அமெரிக்கர், "என்னால் நகர முடியவில்லை. மூச்சும் விட முடியவில்லை" என்று தொடர்ந்து கூக்குரல் எழுப்புகிறார். அருகிலிருந்த பொதுமக்களும் ஆப்பிரிக்க அமெரிக்கருக்கு ஆதரவாகக் காவலர்களிடம் கேள்வி எழுப்பினர். அதற்கு அருகிலிருந்த காவலர்கள், "பாருங்கள் அவர் பேசுகிறார், நன்றாகத்தான் இருக்கிறார்" என்று அலட்சியமாகப் பதிலளித்தனர்.
காவலரின் கோரப் பிடியில் சிக்கிய அவர், மூச்சு விட முடியாததால் மெல்லச் சுயநினைவை இழந்தார். இருப்பினும் அந்த காவலர், தனது பிடியை விலக்கவில்லை. சுமார் 10 நிமிடங்களாக இதேபோல தனது கோரப் பிடியில் அந்த ஆப்பிரிக்க அமெரிக்கரை வைத்துள்ளார்.
அவசர உதவிக் குழு வந்து, அந்த ஆப்பிரிக்க அமெரிக்கரை மீட்கும் வரை தனது பிடியைக் காவலர் விலக்கவில்லை. சம்பவ இடத்திற்கு வந்த குழுவினர் அவரை பரிசோதித்தபோது, அவர் உயிரிழந்துவிட்டதாகத் தெரிவித்தனர்.
அருகிலிருந்தவர்கள் இந்தச் சம்பத்தை வீடியோ எடுத்து சமூக வலைத்தளங்களில் பதிவிட்டனர். இதையடுத்து இந்தச் சம்பவத்தில் தொடர்புடைய நான்கு காவலர்களும் டிஸ்மிஸ் செய்யப்பட்டனர். மேலும், இந்தச் சம்பவம் குறித்து துறை ரீதியான விசாரணை நடத்தப்படும் என்றும் மினியாபோலிஸ் காவல் துறை தெரிவித்துள்ளது.
உயிரிழந்த ஆப்பிரிக்க அமெரிக்கர் 46 வயதாகும் ஜார்ஜ் ஃபிலாய்ட் என்று அடையாளம் காணப்பட்டுள்ளது. கடை ஒன்றில் நடைபெற்ற மோசடி குறித்த வழக்கில் தேடப்பட்டுவந்த குற்றவாளியின் அடையாளங்கள் இவருடன் ஒத்துப்போனதால், காவலர்கள் இவரைக் கைது செய்யாததாகவும் மினியாபோலிஸ் காவல் துறையினர் தெரிவித்தனர். மேலும், கைது செய்ய ஜார்ஜ் ஃபிலாய்ட் ஒத்துழைக்கவில்லை என்றும் காவல் துறை தெரிவித்துள்ளது.
ஆப்பிரிக்க அமெரிக்கர் மீதான இந்தத் தாக்குதலை கண்டித்து பொதுமக்கள் ஜார்ஜ் ஃபிலாய்ட் உயிரிழந்த இடத்தில் போராட்டம் நடத்தினர். அமெரிக்க அதிபராக ட்ரம்ப் பதவியேற்றதிலிருந்து அந்நாட்டில் ஆப்பிரிக்க அமெரிக்கர்கள் மீதான தாக்குதலும், அடக்குமுறையும் தலைதூக்கியுள்ளது கவனிக்கத்தக்கது.
இதையும் படிங்க: டெக் நிறுவனங்களுக்கு விரைவில் வருகிறது கட்டுப்பாடு!