ஜார்ஜ் ப்ளாய்டை கொலை செய்த காவலர் டிரெக் ஜாவின் மீது சாதாரண கொலை வழக்கு (third-degree murder) பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆனால், ஜார்ஜின் குடும்ப வழக்கறிஞர் பெஞ்சமின் இதை திட்டமிட்ட படுகொலை வழக்கில் (first-degree murder) சேர்க்க வேண்டும் என்கிறார்.
இதுகுறித்து பெஞ்சமின், நாங்கள் அந்தக் காவலர் உள்நோக்கத்துடன் கொலை செய்ததாகவே கருதுகிறோம். மூச்சுவிட முடியவில்லை என ஜார்ஜ் கெஞ்சிக் கதறிய போது கழுத்திலிருந்து காலை எடுக்காமல் வைத்திருந்தார் அந்தக் காவலர் என தெரிவித்தார்.
வழக்கறிஞர் பெஞ்சமின் இது தொடர்பாக அளித்த பேட்டி ஒன்றில், காவலர் உடலில் பொருத்தப்பட்டுள்ள கேமராவில் இருந்து எங்களுக்கு ஆடியோ கிடைத்துள்ளது. அதில் ஒரு காவலர், ஜார்ஜுக்கு நாடித்துடிப்பு இல்லை, அவர் உடலை திருப்பும்படி கூறுகிறார். ஆனால், ஜாவின் அதற்கு மறுப்பு தெரிவித்து அதே நிலையில் இருக்கட்டும் என்கிறார். இதைதான் நான் உள்நோக்கம் என குறிப்பிடுகிறேன் என்கிறார்.
ஜார்ஜ் ஃப்ளாய்டின் மரணம் அமெரிக்காவில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது. அமெரிக்காவில் பல்வேறு நகரங்களில் இதன் காரணமாக ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தக் கொலை கறுப்பின அமெரிக்கர்களை கொலை செய்யும் காவலர்களுக்கு எதிராக மீண்டும் புரட்சி நெருப்பை மூட்டியுள்ளது.