கரோனா பாதிப்புகளுக்கு இடையே முகக்கவசம் அணிந்து முதல் முறையாக பொதுமக்களைs சந்தித்துள்ளார் அமெரிக்க அதிபர் ட்ரம்பின் மனைவி மெலனியா ட்ரம்ப். இளைஞர்களின் நலனை முன்னிருத்தி செயல்பட்டு வரும் தனது 'பீ பெஸ்ட்' (BE BEST) அமைப்பைப் பிரபலப்படுத்தும் விதமாக அவ்வப்போது பள்ளி, மருத்துவமனை உள்ளிட்ட இடங்களுக்குச் செல்வதை வழக்கமாகக் கொண்டிருந்த மெலனியாவால், கரோனா தொற்றின் காரணமாக வெளியே செல்ல முடியாமல் போனது.
இதையடுத்து தற்போது யாரும் எதிர்பாராதவிதமாக திடீரென பொதுமக்கள் முன்னிலையில் தோன்றியுள்ளார். வாஷிங்டன் நகரில் பணிபுரியும் தீயணைப்பு வீரர்கள், மருத்துவப் பணியாளர்களைச் சந்தித்து, வெள்ளை மாளிகையில் தயார் செய்த உணவுப் பொட்டலங்களை அவர்களுக்கு வழங்கினார்.
அத்துடன், மீண்டும் பயண்படுத்தக்கூடிய முகக்கவசங்கள், பொருள்களை வைத்துக்கொள்ளும் பைகள், சானிடைசர் உள்ளிட்டவற்றையும் அவர் அளித்துள்ளார். மேலும், கணவரை இழந்து குழந்தைகளுடன் வாழ்ந்துவரும் பெண்களுக்கு தனது அமைப்பின் மூலம் உதவிகளை வழங்கியுள்ளார்.
கடந்த சில வாரங்களுக்கு முன் ஜார்ஜ் ஃப்ளாய்ட் என்ற ஆப்பிரிக்க அமெரிக்கர் காவல் துறையினரால் கொல்லப்பட்ட விவகாரத்தில் இனவெறிக்கு எதிராகக் குரல்கள் எழும்பிய நிலையில், காவல் துறையினர் உள்ளிட்ட சட்டத்தைப் பாதுகாக்கும் அனைத்து அமைப்புகளும் துணை நிற்பதாக அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தெரிவித்தார். அவரது இந்தக் கருத்து ஆதரவளிக்கும் விதமாகவே மெலனியா ட்ரம்ப் இந்தத் திடீர் சந்திப்பை நிகழ்த்தியுள்ளார்.
முன்னதாக, தீயணைப்பு வீரர்கள், காவல் துறையினர், இன்னும் பிற அலுவலர்கள் தங்களது வாழ்க்கையை பொதுமக்களின் பாதுகாப்புக்காக ஒவ்வொரு நாளும் பணயம் வைக்கிறார்கள். அவர்கள் அனைவருக்கும் அமெரிக்க அதிபரும், தானும் துணை நிற்போம் என்று எழுத்துப் பூர்வமாக தெரிவித்திருந்த மெலனியா, தற்போது பொதுமக்கள் முன்னிலையில் தோன்றி அதனை மெய்ப்பித்துள்ளார்.
இதையும் படிங்க: ட்ரம்ப்புடனான திருமணம் குறித்த வதந்திகள்: முற்றுப்புள்ளி வைத்த மெலனியா