அமெரிக்காவின் 46ஆவது அதிபராக ஜோ பைடன் தேர்வாகியுள்ளார். அதேபோல், துணை அதிபராக இந்திய வம்சாவளியைச் சேர்ந்த கமலா ஹாரிஸ் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். அமெரிக்க அதிபர் ஜோ பைடன் வெற்றிபெற்றுள்ள போதும் அவர் 2021 ஆம் ஆண்டு ஜனவரி 20ஆம் தேதி தான் முறைப்படி அமெரிக்க அதிபராக பதவியேற்க உள்ளார். ஆனால், தேர்தல் வாக்குப்பதிவு எண்ணிக்கையில் குளறுபடி ஏற்பட்டுள்ளதாக ட்ரம்ப் குற்றஞ்சாட்டி வருகிறார்.
இந்நிலையில், புதிய அதிபரான ஜோ பைடன் ஆரம்பித்துள்ள 10 பேர் குழுவினராக கொண்ட கரோனா சிறப்புப் பிரிவை இரண்டு முக்கிய நபர்கள் வழிநடத்தவுள்ளனர். இவர்கள் தற்போதைய அதிபர் ட்ரம்பால் நீக்கப்பட்டவர்கள் ஆவர்.
இந்திய வம்சாவளியைச் சேர்ந்த அமெரிக்க மருத்துவரான விவேக் மூர்த்தி, அமெரிக்க அறுவை சிகிச்சை தலைமை நிபுணராக பணியாற்றினர். இவர் 2017இல் ட்ரம்ப் பதவியேற்ற நான்கு மாதங்களுக்குள் வெளியேற்றப்பட்டார். அதே போல்,தடுப்பூசி நிபுணரான டாக்டர் ரிக் பிரைட், மலேரியா மருந்தான ஹைட்ராக்ஸி குளோரோகுயினைச் குறித்த ட்ரம்ப்பின் ஆதாரமற்ற கூற்றுக்களுக்கு எதிராக குரல் கொடுத்தன் காரணமாக நீக்கப்பட்டிருந்தார்.
இவர்கள் மட்டுமின்றி அமெரிக்கா சுகாதார துறையில் ட்ரம்புக்கு எதிராக செயல்பட்டவர்கள் அல்லது விமர்சித்து சிக்கிக் கொண்ட பலரும், ஜோ பைடனின் புதிய சிறப்புப் பிரிவில் இடம்பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.