அமெரிக்காவின் முன்னணி பெருந்தொற்று நிபுணரான ஆன்டனி பாச்சி, அந்நாட்டின் தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு அளித்த பேட்டியில் இந்தியா குறித்து பேசியுள்ளார். கோவிட்- 19 இரண்டாம் அலையில் இந்தியா தத்தளித்து வரும் நிலையில், இதனை எதிர்கொள்வது குறித்து அவரிடம் கேள்வியெழுப்பப்பட்டது.
அதற்கு பதிலளித்த ஆன்டனி பாச்சி, ”கோவிட்-19 பாதிப்பை முடிவுக்கு கொண்டுவர அனைவருக்கு தடுப்பூசி செலுத்துவதே வழி. இந்தியாவுக்கு நீண்டகாலத் தீர்வை தடுப்பூசிதான் தரும்.
உலகின் மிகப்பெரிய தடுப்பூசி தயாரிக்கும் நாடாக இந்தியா உள்ளது. எனவே, உள்நாட்டிலும், வெளிநாட்டிலும் தடுப்பூசி கொள்முதலை அதிகரித்து அனைவருக்கும் விரைவில் தடுப்பூசி செலுத்த அரசு முழு முயற்சியை மேற்கொள்ள வேண்டும்.
கரோனா அலையை கட்டுக்குள் கொண்டுவர இரு வார லாக்டவுன் போன்ற நடவடிக்கைகள் உதவலாம். ஆனால், பிரச்னையை முழுமையாகத் தீர்க்க தடுப்பூசியே வழி' என்றார்.