உலகமே உற்றுநோக்கும் அமெரிக்க அதிபர் தேர்தல் நாளை நடைபெறவுள்ளது. இதில், அதிபர் ட்ரம்ப் குடியரசுக் கட்சி சார்பில் மீண்டும் போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து ஜனநாயகக் கட்சி சார்பில் முன்னாள் துணை அதிபர் ஜோ பிடன் போட்டியிடுகிறார்.
மக்கள் வாக்களிப்பது அதிபருக்கு இல்லை
உலக வல்லரசாகக் கருதப்படும் அமெரிக்காவில் தேர்தலின்போது மக்கள் நேரடியாக வேட்பாளர்களுக்கு வாக்களிப்பதில்லை. அதற்கு பதிலாக எலக்டோரல் காலேஜ் உறுப்பினர்களுக்கு மக்கள் வாக்களிப்பார்கள். எலக்டோரல் காலேஜ் உறுப்பினர்களை வாக்காளர்கள் குழு என்று சொல்லலாம்.
அமெரிக்க அரசியலமைப்பு 200 ஆண்டுகளுக்கு முன் உருவாக்கப்பட்டபோதிலிருந்தே, அதிபரை தேர்ந்தெடுக்க இந்த முறைதான் பின்பற்றப்படுகிறது.
எலக்டோரல் காலேஜ் என்றால் என்ன?
ஒவ்வொரு மாகாணங்களும் அங்குள்ள மக்கள் தொகைக்கு ஏற்ப, எலக்டோரல் காலேஜ் உறுப்பினர்களைக் கொண்டிருக்கும். அதாவது அதிக மக்கள் தொகை கொண்ட கலிபோர்னியா மாகாணம் 55 எலக்டோரல் காலேஜ் உறுப்பினர்களைக் கொண்டுள்ளது. அதேபோல, குறைந்த மக்கள் தொகை கொண்ட அலாஸ்கா வெறும் மூன்று எலக்டோரல் காலேஜ் உறுப்பினர்களையே கொண்டுள்ளது.
அதேநேரம், அமெரிக்கத் தலைநகரான வாஷிங்டன், மாகாணமாகக் கருதப்படுவதில்லை. இதனால், வாஷிங்டனுக்கு மக்கள் தொகை அடிப்படையில் இல்லாமல், வெறும் மூன்று எலக்டோரல் காலேஜ் உறுப்பினர்களே ஒதுக்கப்பட்டுள்ளது.
Winner takes All முறையில் உள்ள சிக்கல்
மேலும், இந்த எலக்டோரல் காலேஜ் உறுப்பினர்களைத் தேர்ந்தெடுக்கவும் 'Winner takes All' என்ற முறையே பின்பற்றப்படுகிறது. உதாரணத்திற்கு கலிபோர்னியா மாகாணத்தை எடுத்துக்கொள்வோம். அங்கு குடியரசுக் கட்சியைவிட ஜனநாயகக் கட்சி ஒரு வாக்கு அதிகமாக பெற்றாலும், மொத்த 55 எலக்டோரல் காலேஜ் வாக்குகளும் ஜனநாயகக் கட்சிக்கே செல்லும்.
இதனால், பெரும்பாலான மக்களின் வாக்குகளைப் பெறாமலேயே அமெரிக்காவில் ஒருவர் அதிபராக முடியும். 2000ஆம் ஆண்டு குடியரசுக் கட்சியை விட, ஜனநாயகக் கட்சி அதிக வாக்குகளைப் பெற்றிருந்தது. இருப்பினும், இந்த எலக்டோரல் காலேஜ் முறையின் காரணமாக குடியரசுக் கட்சியின் ஜார்ஜ் புஷ் முதல் முறையாக அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
அதேபோல 2016ஆம் ஆண்டு தேர்தலிலும் ஹிலாரி கிளிண்டனைவிட, ட்ரம்ப் சுமார் 20 லட்சம் வாக்குகள் குறைவாகப் பெற்றிருந்தார். இருப்பினும், இந்த எலக்டோரல் காலேஜ் முறையால் அவர் அதிபரானார்.
மேலும், இதனால் அதிக எலக்டோரல் காலேஜ் வாக்குகளைக் கொண்ட மாகாணங்களுக்கு மட்டும் அதிபர் வேட்பாளர்கள் அதிக முக்கியத்தும் அளிப்பதாகவும் புகார்கள் உள்ளன. எலக்டோரல் காலேஜ் முறையை மாற்ற பல ஆண்டுகளாக முயற்சிகள் எடுக்கப்பட்டு வந்தாலும், அது வெற்றிபெற முடியவில்லை.
எத்தனை எலக்டோரல் காலேஜ் வாக்குகள் தேவை?
அமெரிக்காவில் மொத்தம் 538 எலக்டோரல் காலேஜ் வாக்குகள் உள்ளன. அவற்றில் 270 எலக்டோரல் காலேஜ் வாக்குகளை எந்த கட்சி பெறுகிறதோ அந்தக் கட்சியைச் சேர்ந்தவரே அதிபராவார்
முதலில் ஒவ்வொரு மாகாணத்திலும் எந்தக் கட்சி வெற்றி பெறுகிறதோ, அந்தக் கட்சி எலக்டோரல் காலேஜ் உறுப்பினர்களை நியமிக்கும். உதாரணத்திற்கு அலாஸ்கா மாகாணத்தில் குடியரசுக் கட்சி வெற்றிபெறுகிறது என்றால் அந்த மாகாணத்தில் இருக்கும் மூன்று எலக்டோரல் காலேஜ் உறுப்பினர்களை குடியரசு கட்சி நியமிக்கும். அதேபோல் இருக்கும் 50 மாகாணத்திற்கும் எலக்டோரல் காலேஜ் உறுப்பினர்கள் நியமிக்கப்படுவார்கள்.
இவ்வாறு அனைத்து மாகாணங்களுக்கும் எலக்டோரல் காலேஜ் உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டவுடன், அவர்கள் டிசம்பர் 14ஆம் தேதி அதிபர் மற்றும் துணை அதிபரை நேரடியாக தேர்ந்தெடுக்க வாக்குகளை செலுத்துவார்கள். இதன் முடிவு 2021ஆம் ஆண்டு ஜனவரி 6ஆம் தேதி அறிவிக்கப்படும். அதைத்தொடர்ந்து ஜனவரி 20ஆம் தேதி அமெரிக்க அதிபராக வெற்றி பெறுபவர் பதவி ஏற்றுக்கொள்வார்.
ஆனால், இந்த முறையெல்லாம் சம்பிரதாய நடைமுறைதான். எலக்டோரல் காலேஜ் வாக்குகளில் 270 என்கிற மெஜிக் எண்ணிக்கையை பெறும் வேட்பாளரின் வெற்றியே உறுதியானதாகும்.
இழுபறி மாகாணங்கள்
அமெரிக்காவில் சில மாகாணங்கள் காலங்காலமாக குடியரசுக் கட்சிக்கே வாக்களிக்கும். அதேபோல் சில மாகாணங்கள் ஜனநாயகக் கட்சிக்கே வாக்களிக்கும். ஆனால், சில மாகாணங்கள் ஒரு தேர்தலில் ஜனநாயகக் கட்சி, மறுதேர்தலில் குடியரசுக் கட்சி என மாறிமாறி வாக்களிக்கும். இந்த மாகாணங்களை இழுபறி மாகாணங்கள் என்று அழைப்பார்கள்.
ஃபுளோரிடா, ஓஹியோ, பென்சில்வேனியா, மிச்சிகன், கொலராடோ ஆகிய மாகாணங்கள் அதிக எலக்டோரல் காலேஜ் வாக்குகளைக் கொண்ட இழுபறி மாகாணங்களாகக் கருதப்படுகின்றன. எனவே, இந்த மாகாணங்களைக் கைப்பற்ற இரு கட்சிகளும் பெரும் முனைப்பு காட்டி வருகின்றன.
இதையும் படிங்க: அமெரிக்க தேர்தல்: இறுதிக்கட்ட கருத்துக்கணிப்பு கூறுவது என்ன?