கோவிட்-19 எனக் கூறப்படும் கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக உலகின் பல நாடுகள் இன்று மிகப்பெரிய அச்சுறுத்தலை எதிர்கொண்டுவருகின்றன. இந்த வைரஸ் தொற்று பாதிப்பின் எதிரொலியாகப் பல்வேறு சிரமங்களையும் மக்கள் அனுபவிக்கின்றனர்.
சீனாவில் தொடங்கிய கொரோனாவின் பாதிப்பானது, தற்போது உலக நாடுகள் முழுவதும் பரவி சுமார் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
அமெரிக்கா உள்ளிட்ட மருத்துவத் துறையில் வளர்ச்சி அடைந்த நாடுகள்கூட இன்று கொரோனாவைக் கட்டுப்படுத்துவதில் திண்டாடிவருகிறது. அமெரிக்காவில் இதுவரை 31 பேர் இதனால் உயிரிழந்துள்ளனர்.
இந்நிலையில், கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட அமெரிக்காவைச் சேர்ந்த பெண் ஒருவர் அதிலிருந்து மீண்டுவந்துள்ளார். வாஷிங்டன் மாநிலத்தின் சியாட்டில் பகுதியைச் சேர்ந்தவர் எலிசபெத் ஷினைடன் (37). இவர் கடந்த சில நாள்களுக்கு முன் கொரோனாவால் பாதிக்கப்பட்டார். தன்னம்பிக்கையுடன் இதனை எதிர்கொண்ட காரணத்தால், தற்போது அதிலிருந்து முழுவதுமாக மீண்டுவந்துள்ளார்.
இதனிடையே, தான் மீண்டுவந்தது குறித்து, கொரோனாவால் பாதிக்கப்பட்ட மற்றவர்களுக்கு நம்பிக்கையளிக்கும்விதமாக சில தகவல்களைப் பகிர்ந்துள்ளார் எலிசபெத் ஷினைடன்.
அதில், "கொரோனாவைக் கண்டு பயப்பட வேண்டாம்; அதனை எதிர்கொள்ளுங்கள். உங்களுக்கு கொரோனா இருக்குமோ என்ற அச்சம் ஏற்பட்டால் உடனடியாக மருத்துவரைச் சென்று அணுகுங்கள். நிறைய தண்ணீர் குடிக்க வேண்டும். நன்கு ஓய்வெடுக்க வேண்டும். சாதாரண காய்ச்சல் என்றால் வீட்டிலிருந்தே சிகிச்சை மேற்கொள்ளுங்கள்” எனப் பகிர்ந்துள்ளார்.
இதையும் படிங்க: கனடா பிரதமர் மனைவிக்கு கொரோனா: உறுதி செய்த மருத்துவர்கள்