உலகளவில் கரோனா வைரஸ் காரணமாக உயிரிழந்தோரின் எண்ணிக்கை 4 லட்சத்தை தாண்டியுள்ளது. தினந்தோறும் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்து வருகின்றனர். வைரஸுக்கான தடுப்பூசி மருந்து கண்டுபிடிப்பில் பல நாடுகளின் விஞ்ஞானிகள் களமிறங்கியுள்ளனர்
இந்நிலையில், அமெரிக்காவில் உள்ள பயோடெக் நிறுவனம், மாடுகளை மரபணு ரீதியாக மாற்றியமைத்து உருவாக்கப்படும் ஆன்டிபாடிகள் மூலம் கரோனா தொற்றை தடுக்க முடியும் என கருதுகின்றனர்.
இதுகுறித்து அந்நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், மாடுகளின் மரபணுக்கள் மாற்றியமைப்படுவதால் ஏற்படும் டிஎன்ஏவிலிருந்து தயாராகும் அன்டிபாடிகள் சக்தி வாய்ந்ததாக காணப்படும். மற்ற அனைத்து விலங்குகளைவிட மாட்டில்தான் அதிகளவில் மனிதர்களுக்கு தேவையான ஆன்டிபாடிஸ் தயாரிக்க முடிகிறது. இதற்கான மருத்துவ பரிசோதனை விரைவில் தொடங்கபடும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த ஆய்விற்கு தலைமை தாங்கும் எஸ்ஏபி பயோ தெரபியூடிக்ஸ் நிறுவனத்தின் தலைவரான சல்லிவன் கூறுகையில், "மாட்டு ரத்தத்தில் மனித இரத்தத்தைவிட ஒரு மில்லி லிட்டருக்கு இரண்டு மடங்கு ஆன்டிபாடிகள் இருக்கலாம். பசுக்களால் 'பாலிக்குளோனல்' ஆன்டிபாடிகள் உருவாக்க முடியும். இதனால், எளிதில் வைரஸின் வீரியம் குறைந்து, குணப்படுத்த முடியும். திட்டமிட்டப்படியே மாட்டினால் வைரஸ் குணமடைந்தால், ஒவ்வொரு மாதமும் ஒரு மாடு பல நூறு நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்க தேவையான ஆன்டிபாடிகளை வழங்க முடியும்" என்றார்.