சான் ஜோஸ்: ஐக்கிய அரபு அமீரகம், சீனா, சிலி, கியூபா உள்ளிட்ட நாடுகளில் 18 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு கரோனா தடுப்பூசி செலுத்தும் பணி நடைபெற்றுவருகிறது. இந்தியாவில் இதற்கான முதல்கட்ட பணிகள் நடைபெற்றுவருகின்றன.
இதனிடையே, இரண்டு முதல் 18 வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கு பாரத் பயோடெக் நிறுவனத்தின் கோவாக்சின் தடுப்பூசியை செலுத்த நிபுணர் குழு ஒப்புதல் அளித்துள்ளது. இந்த நிலையில் அமெரிக்க நாடான கோஸ்டா ரிக்காவில், ஐந்து வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு கட்டாயமாக கரோனா தடுப்பூசி செலுத்த வேண்டும் என்று அந்நாட்டு அரசு உத்தரவிட்டுள்ளது.
ஏஒய்.4.2(AY.4.2) கரோனா வைரஸ்
இது ஒருபுறமிருக்க, மத்திய பிரதேசம், மகாராஷ்டிரா, கர்நாடகா, இமாச்சல பிரதேச மாநிலங்களில் மாணவர்களிடையே கரோனா தொற்றுபரவல் அதிகரித்து வருகிறது. குறிப்பாக இதில் பல மாணவர்களுக்கு உருமாற்றமடைந்த ஏஒய்.4.2(AY.4.2) கரோனா வைரஸ் பரவியுள்ளதாக கூறப்படுகிறது.
ஏஒய்.4.2 வைரஸ், கரோனாவைவிட 6 மடங்கு வேகமாக பரவும் தன்மை கொண்டது மத்திய சுகாதார அமைச்சர் மன்சுக் மாண்டவியா தெரிவித்துள்ளார். எனவே பள்ளிகள் திறக்கப்பட்டுள்ள நிலையில் சிறுவர்களுக்கு தடுப்பூசி செலுத்த மத்திய அரசு விரைவில் அறிவிப்பு வெளியிட வேண்டும் என்று பல்வேறு கோரிக்கைகள் எழுந்துவருகின்றன.
இதையும் படிங்க: மாணவர்களுக்கு கரோனா... பள்ளிகள் திறப்பில் திடீர் முடிவு...