ஃபைசர் நிறுவனத்தின் கரோனா தடுப்பு மருந்திற்குப் பிரிட்டனும் பஹ்ரைனும் ஒப்புதல் வழங்கியுள்ள நிலையில், இன்னும் சில தினங்களில் அமெரிக்காவும் ஃபைசர் அல்லது மாடர்னா தடுப்பு மருந்திற்கு ஒப்புதல் அளிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இருப்பினும், தடுப்பு மருந்தை எடுத்துக்கொள்ளவதில் அமெரிக்கர்களுக்குத் தொடர்ந்து தயக்கம் நிலவிவருகிறது. இதனால் தடுப்பு மருந்திற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டாலும் எத்தனை அமெரிக்கர்கள் தடுப்பு மருந்தை எடுத்துக்கொள்வார்கள் என்பதில் பெரும் சந்தேகம் நிலவுகிறது. இதனால் கரோனா பரவலும் கட்டுக்குள் வராது என்று அஞ்சப்படுகிறது.
இந்நிலையில், அமெரிக்காவில் கரோனா தடுப்பு மருந்தை எடுத்துக்கொள்வது கட்டாயமாக்கப்படலாம் என்று தகவல் வெளியானது. இது குறித்து ஜனவரி மாதம் அதிபராக பொறுப்பேற்கவுள்ள ஜோ பைடன் கூறுகையில், "தடுப்பு மருந்து கட்டாயமாக இருக்க வேண்டும் என்று நான் நினைக்கவில்லை.
முகக்கவசம் அணிவது கட்டாயமாக்கப்படவில்லை என்றாலும் மக்கள் முகக்கவசம் அணிவதை ஊக்குவிக்க நான் எப்படி என்னால் முடிந்த அனைத்தையும் செய்வேனோ, அதேபோல தடுப்பு மருந்தை மக்கள் எடுத்துக்கொள்வதை ஊக்குவிக்க என்னால் முடிந்த அனைத்தையும் செய்வேன்.
எனது அதிபர் உரையில் நான் மக்களை 100 நாள்களுக்கு மட்டும் முகக்கவசம் அணிய கேட்டுக்கொள்ளவிருக்கிறேன். ஏனென்றால், இது ஒன்றும் அரசியல் பிரச்சினை அல்ல; பொது சுகாதாரப் பிரச்சினை.
மேலும், மக்கள் 100 நாள்கள் முகக்கவசம் அணிந்தால் போதும், அதற்குள் கரோனா தடுப்பு மருந்து மக்களுக்கு வழங்கும் பணிகள் தொடங்கிவிடும். இதன்மூலம் கரோனா உயிரிழப்புகளைப் பெரியளவில் குறைக்கலாம். இதை மக்கள் கண்கூடாகப் பார்ப்பார்கள். நம்முடன் இருக்கும் மற்றவர்களைப் பாதுகாப்பதுதான் உண்மையான நாட்டுப்பற்று.
நான் மக்கள் முன்னிலையில் கரோனா தடுப்பு மருந்தை எடுத்துக் கொள்ளவுள்ளேன். இதைப் பார்ப்பது மூலம் மக்களுக்கு நம்பிக்கை அதிகரிக்கும்" என்றார்.
அமெரிக்காவில் வெள்ளிக்கிழமை மட்டும் 2,961 பேர் கரோனாவால் உயிரிழந்தனர். அமெரிக்காவில் தற்போதுவரை 1.4 கோடிக்கும் அதிகமானோருக்கு கரோனா உறுதிசெய்யப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: பிரிட்டனுக்குப் பின் பஹ்ரைன்: ஃபைசர் கரோனா தடுப்பு மருந்திற்கு ஒப்புதல்