சீனாவில் கண்டறியப்பட்ட கோவிட்-19 தொற்று, தற்போது அந்நாட்டில் குறைந்திருந்தாலும் மற்ற நாடுகளில் வேகமாகப் பரவிவருகிறது. இதனால் பல்வேறு நாடுகளிலும் ஊரடங்கு உத்தரவுப் பிறப்பிக்கப்பட்டு, இயல்பு வாழ்க்கை முற்றிலும் முடங்கியுள்ளது. இத்தொற்றால் முதல் உயிரிழப்பு கடந்த ஜனவரி மாதத்தில் பதிவானதையடுத்து, பல நாடுகளில் மக்கள் நாளுக்கு நாள் கொத்து கொத்தாக உயிரிழந்து வருகின்றனர்.
மிகவும் எளிதாக பரவும் இந்த வைரசைக் கட்டுப்படுத்த முடியாமல் உலக நாடுகள் திணறிவருகின்றன. இதனால் அசாதாரண சூழல் ஏற்பட்ட நிலையில், இந்நோயை மனித நெருக்கடி என, ஐநா துணை தலைவர் அமினா முகமது குறிப்பிட்டுள்ளார்.
கரோனா வைரஸ் நோய் தடுப்பு நடவடிக்கை குறித்த கூட்டம் அமெரிக்கா நியூயார்க் நகரில் நடைபெற்றது. இதில், கலந்து கொண்ட அவர், "அனைத்து தரப்பினருக்கும் பாதிப்பை ஏற்படுத்தியதன் மூலம் கரோனா வைரஸ் தொற்று மனித இனத்திற்கு நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது. உலகம் முழுவதும் சுகாதார அவசர நிலை நிலவிவருகிறது.
இந்த அவசர கால நிலையில், மனித இனத்திற்கு அழுத்தம் தரப்படுகிறது. சமத்துவமின்மை, பாலினம் வேறுபாடு, இந்த நெருக்கடியால் அதிகரித்துள்ளது. தற்போது ஒன்றிணைந்து நடவடிக்கை மேற்கொள்வது அவசியமாகிறது. சுகாதாரத்துறையில் ஏற்பட்டுள்ள நெருக்கடியை மட்டும் தேர்ந்தெடுத்து நடவடிக்கை மேற்கொள்ளக்கூடாது.
மனித இனத்தின் நடவடிக்கைக்கு மட்டும் முக்கியத்துவம் அளிக்கக்கூடாது. உணவு, மருந்து ஆகியவற்றில் ஏதேனும் ஒன்றை மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும் என நாம் எதிர்பார்க்கக்கூடாது. கரோனா வைரஸ் நோய் உலக நாடுகளை அச்சுறுத்திவரும் இக்காலகட்டத்தில், நிலையான வளர்ச்சி ஒன்றே நமது குறிக்கோளாக இருக்க வேண்டும்.
2030ஆம் ஆண்டை நோக்கிச் செல்லும் நமக்கு வைரஸ் தொற்றுத் தொடர்ந்து பிரச்னைகளை ஏற்படுத்திவருகிறது. பொது எதிரியான வைரஸை எதிர்த்து போராடிவருகிறோம். ஒற்றுமையைும், அமைதியும் மட்டுமே நமது பதிலாக இருக்க வேண்டும்" என்றார்.
இதையும் படிங்க: கரோனாவால் ஐடியில் வேலையிழப்பு ஏற்படுமா?