உலகளவில் கரோனா பெருந்தொற்று பாதிப்பையும், வேதனையையும் ஏற்படுத்தியுள்ளது. கரோனா பெருந்தொற்று காரணமாக உலக நாடுகள் பொருளாதார ரீதியாகவும் பெரும் இழைப்பைச் சந்தித்துள்ளன. பல்வேறு துறைகளில் தொழில்கள் முடங்கி வருவாய் குறைந்து இழப்பு ஏற்பட்டுள்ளது. கரோனா நெருக்கடியைச் சமாளிக்கப் பல நிறுவனங்கள் ஊழியர்களை வேலையைவிட்டு நீக்குவது, சம்பளத்தைக் குறைப்பது போன்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டுவருகின்றன.
கொக்க கோலா நிறுவன பொருளாதார இழப்பு
இப்போது அந்தப் பட்டியலில் உலகின் மிகப்பெரிய நிறுவனங்களின் முன்னோடியாக விளங்கும் கொக்க கோலா நிறுவனமும் சேர்ந்துள்ளது. மல்டி நேஷனல் என்றாலே நமக்கு நினைவுக்கு வருவது கொக்க கோலா நிறுவனம்தான். அமெரிக்காவின் அட்லாண்டா மாநிலத்தை மையமாகக் கொண்டு செயல்பட்டுவரும் இந்த நிறுவனம், கரோனா காரணமாக பெரும் பொருளாதார இழப்பைச் சந்தித்துவருகிறது. மொத்தம் 17 இடங்களில் இந்நிறுவனம் தொழில் நடத்திவருகிறது.
கொக்க கோலா ஊழியர்கள் பணிநீக்கம்
கரோனா ஊரடங்கால் மால், வணிக வளாகங்கள், திரையரங்குகள் என அனைத்தும் கடந்த 9 மாதங்களுக்கு மேலாக மூடப்பட்டிருந்தன. இந்த இடங்களில், கொக்க கோலா போன்ற குளிர்பானங்களுக்கு அதிக தேவை உள்ளது. இதனால் கொக்க கோலா குளிர்பானம் விற்பனை பெருமளவில் சரிந்தது. கடந்த ஜூலை-செப்டம்பர் மாதங்களில் நிறுவனத்தின் சந்தை மதிப்பு 9 விழுக்காடு சரிந்துள்ளது. இதனைச் சமாளிக்க பணிநீக்கத்தில் மும்முரமாக ஈடுபட்டுவருகிறது. அதன்படி 2,200 ஊழியர்கள் பணிநீக்கம் செய்யப்படுவதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
முதற்கட்ட பணிநீக்கத்தில் அமெரிக்காவில் உள்ள கொக்க கோலா பணியாளர்கள் அதிகளவில் பணிநீக்கம் செய்யப்பட உள்ளனர். இங்கு சுமார் 10,400 பேர் பணியாற்றிவருகின்றனர். 2019ஆம் ஆண்டு கொக்க கோலா நிறுவனம் உலகளவில் 86 ஆயிரத்து 200 பேரை புதிதாக வேலைக்கு எடுத்தது குறிப்பிடத்தக்கது.
இந்நிறுவனம் பணிநீக்கம் மட்டுமல்லாமல் உற்பத்தி ஆலைகளின் எண்ணிக்கையைக் குறைக்கவும் முடிவுசெய்துள்ளது. மொத்தம் 17 இடங்களில் இந்நிறுவனம் தொழில் நடத்திவரும் நிலையில் இந்த எண்ணிக்கையை ஒன்பதாகக் குறைக்கத் திட்டமிட்டுள்ளது.