கனடாவில் கரோனா தொற்று பாதிப்பை பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ கையாண்டது குறித்து எதிர்க்கட்சி எம்.பி.க்கள் தொடர்ச்சியாக விமர்சித்துவந்தனர். இந்நிலையில், கனடா நாடாளுமன்றத்தில் ஒன்றிணைந்த எதிர்க்கட்சிகள் ஜஸ்டின் ட்ரூடோ அரசின் கரோனா நடவடிக்கைகள் குறித்து விசாரணை மேற்கொள்ள வேண்டும் என்ற தீர்மானத்தை முன்வைத்தனர்.
இதுதொடர்பாக, நாடாளுமன்றத்தில் 176 பேரிடம் நடைபெற்ற வாக்கெடுப்பில், 152 பேர் விசாரணை மேற்கொள்ள ஆதரவு தெரிவித்ததின் அடிப்படையில், கனடாவின் பொதுமன்றம் அல்லது இரு சபை நாடாளுமன்றத்தின் கீழ் அறை விசாரணை நடத்த முடிவுசெய்யப்பட்டது.
கன்சர்வேட்டிவ் கட்சி, பிளாக் கியூபெக்கோயிஸ், புதிய ஜனநாயகக் கட்சி, பசுமைக் கட்சி உள்ளிட்ட கட்சிகளைச் சேர்ந்த எம்.பி.க்கள் அனைவரும் தீர்மானத்திற்கு ஆதரவாக வாக்களித்தபோது, ஆளும் லிபரல் கட்சி எம்.பி.க்கள் மட்டும் தீர்மானத்திற்கு எதிராக வாக்களித்தனர்.
இந்தத் தீர்மானத்தின்படி பிரதமர் அலுவலகம், பிரிவு கவுன்சில் அலுவலகம், ஹெல்த் கனடா, கனடாவின் பொது சுகாதார நிறுவனம், அமைச்சர்களின் அலுவலகங்கள் ஆகியவற்றில் உள்ள தொற்றுநோய் குறித்த மின்னஞ்சல்கள், ஆவணங்கள், பிற குறிப்புகளை அரசு வெளியிட வேண்டும்.
இந்தத் தீர்மானம் நிறைவேற்றப்படுவதற்கு முன்பு, பல தொழில் நிறுவனங்கள், வல்லுநர்கள் எதிர்ப்புத் தெரிவித்தனர்.
இது குறித்து அவர்கள் கூறுகையில், "தனிப்பட்ட பாதுகாப்பு உபகரணங்கள், சோதனை சாதனங்களின் சப்ளையர்களுடனான மத்திய அரசின் வணிக ஒப்பந்தங்களை விவரிக்கும் ரகசிய ஆவணங்களை வெளியிடுவது கனடா உற்பத்தியாளர்களையும், கனடாவின் உலகளாவிய வணிக நற்பெயரையும் பாதிக்கும்" எனக் கருத்து தெரிவித்தனர்.