உலக நாடுகளில் கோவிட்-19 தொற்றின் தாக்கம் தொடர்ந்து அதிகரித்துவருகிறது. குறிப்பாக, இந்தத் தொற்றால் மிகவும் மோசமாகப் பாதிக்கப்பட்ட நாடுகளில் பிரேசிலும் ஒன்று. கோவிட்-19 பரவலைத் தடுக்க பிரேசில் தவறிவிட்டதாக பலரும் குற்றஞ்சாட்டிவருகின்றனர்.
இந்நிலையில், கோவிட்-19 தொற்றால் உயிரிழந்தவர்கள் குறித்த தகவல்களைப் புதிய முறையில் கணக்கிடப்போவதாக பிரேசில் வெள்ளிக்கிழமை அறிவித்தது. அதன்படி கரோனாவால் ஏற்பட்ட தினசரி உயிரிழப்புகள் மட்டுமே வெளியிடப்படும் என்றும், மொத்தம் உயிரிழந்தவர்களின் கணக்கு வெளியிடப்பட மாட்டாது என்றும் பிரேசில் அறிவித்தது.
பிரேசிலின் இந்த அறிவிப்புக்குப் பல்வேறு உலக நாடுகளிடமிருந்தும் கடும் எதிப்புகள் கிளம்பின. இதுதொடர்பாக பிரேசில் உச்ச நீதிமன்றத்தில் நடைபெற்ற வழக்கிலும், பழைய முறையில் கரோனா கணக்குகளை வெளியிட நீதிபதி உத்தரவிட்டார்.
அதைத் தொடர்ந்து, கோவிட்-19 தொற்றால் ஒட்டுமொத்தமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை பிரேசில் இன்று மீண்டும் வெளியிட்டது. இந்நிலையில், உலகச் சுகாதார அமைப்பின் செயல்பாடுகள் திருப்திபடுத்தும் வகையில் இல்லை என்றும், இந்த அமைப்பிலிருந்து பிரேசில் வெளியேறுவது குறித்து பரிசீலித்துவருகிறோம் என்றும் பிரேசில் அதிபர் ஜெய்ர் போல்சனாரோ தெரிவித்துள்ளார்.
முன்னதாக, இதே ஜெய்ர் போல்சனாரோ, கரோனாவை வெறும் ஒரு சிறு தொற்று என்றும், அதற்காக மக்களை வீட்டிலேயே தங்கவைப்பது பொருளாதாரத்தை மோசமாக்கும் என்றும் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: போராட்டங்களைச் சமாளிக்க முப்படைகளுக்குமான தலைமைத் தளபதியாக ஆப்பிரிக்க அமெரிக்கர் நியமனம்!