அமெரிக்க அதிபர் தேர்தல் கடந்த மாதம் நடைபெற்றது. இதில் ஜனநாயகக் கட்சியின் அதிபர் வேட்பாளர் ஜோ பைடனும், துணை அதிபர் வேட்பாளர் கமலா ஹாரிஸும் பெருவாரியான வாக்குகளைப் பெற்றிருந்தனர்.
அமெரிக்க அதிபர் தேர்தலின்போது மக்கள் நேரடியாக வேட்பாளர்களுக்கு வாக்களிப்பதில்லை. அதற்குப் பதிலாக எலக்டோரல் காலேஜ் உறுப்பினர்களுக்கு மக்கள் வாக்களிப்பார்கள். அப்படி, அதிக எலக்டோரல் காலேஜ் உறுப்பினர்களைக் கொண்ட ஜோ பைடன், அதிகாரப்பூர்வமாக அமெரிக்க அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
இந்நிலையில், தனது சொந்த ஊரான வில்மிங்டனில் பேசிய ஜோ பைடன், 'டெக்சாஸ் போன்ற முக்கிய மாநிலங்களில், குடியரசுக் கட்சி எம்.பி.க்களும், அலுவலர்களும் வழக்குத் தொடுத்து, எனது வெற்றியை திசை திருப்ப முயற்சி செய்கின்றனர்.
இருந்தபோதிலும், அமெரிக்காவில் சட்டத்தின் ஆட்சியும், அரசியலமைப்பும், மக்களின் விருப்பமும் மட்டுமே நீடித்து நிலை நிற்கும் என்பதை இந்த அதிபர் தேர்தல் நமக்கு எடுத்துரைக்கிறது' என்றார்.
மேலும், இந்த அதிபர் தேர்தல் வெற்றியின் மூலம் அமெரிக்காவில் ஜனநாயகம் பல சோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டாலும் இறுதியில் அது உயிர்ப்புடன் எழுந்துள்ளது எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க...ஜோ பைடன், கமலா ஹாரிஸ் வெற்றி அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு