அமெரிக்காவில் வரும் நவம்பர் 3ஆம் தேதி நடைபெறவுள்ள அதிபர் தேர்தலில் ட்ரம்பை எதிர்த்து ஜனநாயகக் கட்சி சார்பில் ஜோ பிடன் போட்டியிடுகிறார். தேர்தலுக்கு இன்னும் இரண்டு வாரங்களே உள்ள நிலையில் இரு தரப்பினரும் தங்கள் பரப்புரையை தீவிரப்படுத்தியுள்ளனர்.
பிகார் மாநில சட்டபேரவைத் தேர்தலை முன்னிட்டு கடந்த சில நாள்களுக்கு முன் பாஜக தேர்தல் அறிக்கையை வெளியிட்டது. அதில், தேர்தலில் பாஜக வெற்றி பெற்றால் அனைவருக்கும் கரோனா தடுப்புமருந்து இலவசமாக வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.
பாஜகவின் இந்த வாக்குறுதியை அடுத்து ”தடுப்புமருந்தை மக்களுக்கு இலவசமாக வழங்குவது அரசாங்கத்தின் கடமை” எனக் கூறி, காங்கிரஸ் உள்ளிட்ட பல எதிர்க்கட்சிகளும் இதனைக் கடுமையாக விமர்சித்தனர்.
இந்நிலையில், இதேபோன்ற ஒரு வாக்குறுதியை ஜனநாயகக் கட்சியின் அதிபர் வேட்பாளர் ஜோ பிடன் தற்போது அறிவித்துள்ளார். இது குறித்து அவர், "நம்மிடம் பாதுகாப்பான மற்றும் பயனுள்ள தடுப்புமருந்து கிடைக்கும்போது, அது காப்பீடு உள்ளவர்கள், இல்லாதவர்கள் என அனைவருக்கும் இலவசமாக இருக்க வேண்டும்" என்றார்.
மேலும், கரோனா தொற்று பரவத் தொடங்கி எட்டு மாதங்கள் ஆகியுள்ள நிலையிலும்கூட, அமெரிக்கா இந்தத் தொற்றை கட்டுப்படுத்த ஒரு முறையான செயல்திட்டத்தை இன்னும் உருவாக்கவில்லை என்றும் அவர் விமர்சித்தார்.
அமெரிக்காவில் இதுவரை 87 லட்சத்திற்கும் அதிகமானோருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர்களில் 2.2 லட்சம் பேர் உயிரிழந்துள்ளனர்.
இதையும் படிங்க: ட்ரம்ப் ஒரு இனவெறியர் - கமலா ஹாரிஸ் பரபரப்பு குற்றச்சாட்டு!