அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றிபெற்ற ஜனநாயகக் கட்சி வேட்பாளர் ஜோ பைடன் அதிரடியான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். வெறுப்புணர்வு அரசியலிலிருந்து நாட்டை ஒன்றிணைப்பதே முதல் பணி என அதிபர் தேர்தலில் வெற்றிபெற்றதைத் தொடர்ந்து தான் ஆற்றிய உரையில் பைடன் தெரிவித்திருந்தார்.
கரோனாவுக்கு எதிரான போரின் முக்கிய நடவடிக்கையாக கோவிட் -19 ஆலோசனைக் குழு ஒன்றை பைடன் அமைத்துள்ளார். சிறுபான்மையினர் வாழ்வில் பெருந்தொற்று ஏற்படுத்திய தாக்கம் குறித்து ஆராயப்படும் என இந்த ஆலோசனை குழு அறிவிப்பு வெளியிட்டது. அதன்படி அமெரிக்க வாழ் ஸ்பானிஷ் மக்களை சந்தித்த இந்த கோவிட்-19 ஆலோசனைக் குழு அவர்களது குறைகளைக் கேட்டறிந்தது.
தொடர்ந்து வெளியிடப்பட்ட அறிக்கையில், "பைடன்-ஹாரிஸ் கோவிட்-19 ஆலோசனைக் குழுவின் துணைத் தலைவர் நுனேஸ்-ஸ்மித், குழு உறுப்பினர் மருத்துவர் ராபர்ட் ரோட்ரிக்ஸ் ஆகியோர் கரோனாவால் பெரும் பாதிப்படைந்த அமெரிக்க வாழ் லத்தின் மக்கள், வெளிமாநிலத் தொழிலாளர்களை சந்தித்து குறைகளைக் கேட்டறிந்தனர். சிறுபான்மையினரின் வாழ்வில் பெருந்தொற்றால் ஏற்பட்டுள்ள தாக்கம் குறித்து விவாதிக்கப்பட்டது" என குறிப்பிடப்பட்டுள்ளது.
கரோனா முன்களப் பணியாளர்கள், கரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் ஆகியோர் எதிர்கொண்ட சவால்கள் குறித்தும் இக்கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.