கரோனா கால ஊரடங்கால் பெரும்பாலான தனியார் நிறுவனங்கள் வீட்டிலிருந்தே வேலை செய்யும் திட்டத்தை அறிமுகப்படுத்தின. சில ஊடகங்களிலும் இந்த முறை கையாளப்பட்டது.
பல ஊடக நிகழ்ச்சிகள் காணொலி கலந்தாய்வு வழியாக நடைபெற்றதையும் நாம் கண்டுகளித்திருப்போம். வீட்டிலிருந்தே நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்குவதால் பெரும்பான்மையான தொகுப்பாளர்கள் மேலாடையில் மட்டும் கவனம் செலுத்தி நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.
சில நேரலை நிகழ்ச்சிகளில் தொகுப்பாளர்கள் பங்கேற்கும்போது அவர்களது குழந்தைகள் அவர்களைத் தொந்தரவு செய்வது போன்ற காட்சிகளும் இடம்பிடித்து வைரலாகின. இந்நிலையில் தற்போது ஊரடங்கில் கொஞ்சம் கொஞ்சமாக தளர்வுகள் ஏற்பட்டு பல நாடுகள் இயல்பு வாழ்க்கைக்குத் திரும்பியுள்ளன.
பல அலுவலகங்கள் திறக்கப்பட்டு இயல்பான நடைமுறைக்கு வந்துள்ளன. இந்நிலையில் தொகுப்பாளர் ஒருவர் வீட்டிலிருந்து நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்கும்போது எப்படி உடை அணிந்திருந்தரோ அப்படியே அலுவலகத்திலும் அணிந்தவாறு நிகழ்ச்சியை தொகுத்து வழங்கியது வைரலாகியுள்ளது.
லண்டனில் இயங்கிவரும் பிபிசி செய்தி நிறுவனத்தின் தொகுப்பாளர் ஷான் லே கோட், ஷார்ட்ஸ் அணிந்துகொண்டு செய்தியறிக்கையை வாசித்துள்ளார். அதுமட்டுமின்றி அவர் சாதாரண காலணிகளை அணிந்திருந்தார்.
காணொலியிலிருந்த அந்தக் காட்சியை ஸ்கிரீன் ஷாட் எடுத்து மாசிமோ பினி என்பவர் சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ளார். பலரும் அவரை தற்போது கேலி செய்துவருகின்றனர்.
அவர்களில் ஒருவர் லண்டனில் நிலவிவரும் வெட்கை காரணமாக அவர் இவ்வாறு அணிந்திருக்கலாம் என்று தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: அவ்வை சண்முகி, ரெமோவுக்கே டஃப் கொடுத்த ரியல் ஸ்டோரி: உ.பி.யில் ருசிகரம்