எத்தியோப்பியாவில் கடந்த மார்ச் மாதம் 10ஆம் தேதி போயிங் 737 மேக்ஸ் 8 ரக விமானம் விபத்துக்குள்ளானதில் 35 நாடுகளைச் சேர்ந்த 157 பேர் பலியாகினர். அதே போன்று கடந்தாண்டு அக்டோபர் மாதம் இந்தோனேஷியாவில் ஏற்பட்ட விபத்தில் 189 பேர் உயிரிழந்தனர். இந்த இரண்டு கோர விபத்துகளும் உலகளவில் பெரும் தாக்கத்தை உருவாக்கியதோடு போயிங் ரக விமானத்தின் பாதுகாப்பு மீது கேள்வி எழுந்தது.
இதனையடுத்து பல்வேறு நாடுகளும் பாதுகாப்பு காரணங்களுக்காக இந்த போயிங் 737 மேக்ஸ் 8 ரக விமான சேவையை தற்காலிகமாக ரத்து செய்தது. இந்தோனேஷியா ஏர்லைன்ஸ் போயிங் நிறுவனத்துடன் மேற்கொண்ட ஒப்பந்தத்தையும் ரத்து செய்தது.
இதற்கிடையே, இந்த விபத்து குறித்த சர்வதேச விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. போயிங் 737 மேக்ஸ் 8 ரக விமான சேவையை ஜூன் மாதம் 5ஆம் தேதி வரை ரத்து செய்வதாக அமெரிக்க ஏர்லைன்ஸ் நிறுவனம் தெரிவித்திருந்த நிலையில், தற்போது ஆகஸ்ட் 19ஆம் தேதி வரை ரத்து செய்வதாக அறிவித்துள்ளது. இதன் மூலம் வரும் மாதங்களில் தினமும் 115 விமான சேவை பாதிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.