தென் அமெரிக்க கண்டத்தின் 60 லட்ச சதுர கி.மீ. பரப்பளவை அமேசான் வெப்பமண்டல மழைக்காடுகள் கொண்டுள்ளன. இது பிரேசிலின் மொத்த பரப்பளவில் 40 சதவீதமாகும். இந்த காடுகள், வடக்கே கயானா ஹைலேண்ட்ஸ் மலைகள், மேற்கில் ஆண்டிஸ் மலைகள், தெற்கே பிரேசிலிய மத்திய பீடபூமி, கிழக்கே அட்லாண்டிக் பெருங்கடல் ஆகியவற்றால் சூழப்பட்டுள்ளது.
இங்கு உலகின் மிக நீளமானதுமான அமசோனியா நதி ஓடுகிறது. இது பொதுவாக அமேசான் நதி என்று அழைக்கப்படுகிறது. இந்த நதி பெரு நாட்டில் தொடங்கி சுமார் 6,400 கி.மீட்டர்கள் வரை நீண்டு அட்லாண்டிக் பெருங்கடலில் கலக்கிறது. இப்பகுதியில் நிலவும் அதிக மழைப்பொழிவு, ஈரப்பதம், ஒரே மாதிரியான வெப்பநிலை ஆகியவற்றின் பிரதிபலிப்பே அமேசான் காடுகளின் அபரிமிதமான அளவிற்கும், வராலாற்றிற்கும் முக்கிய அங்கமாக விளங்குகிறது.
மகத்தான அமேசான் மழைக்காடுகள்
அமேசான் மழைக்காடுகள் உலகின் மிகவும் மாறுபட்ட உயிரியல் அமைப்பை கொண்டாதாகும். இங்கு பல லட்சக்கணக்கான பூச்சி, தாவரம், பறவை, விலங்கு மற்றும் பிற உயிரின வகைகள் வாழ்கின்றன. இவற்றில் பல உயிரினங்கள் இன்னும் பதிவு செய்யப்படவில்லை. உலகில் உற்பத்தியாகும் மொத்த ஆக்சிஜன் அளவில் 20 சதவீதம் இங்கு உற்பத்தியாவதால், இந்த காடுகளை உலகின் நுரையீரல் என்று அறிவியலாளர்கள் அழைக்கின்றனர்.
இந்த மகத்தான அமேசான் மழைக்காடுகள் காலநிலை மாற்றத்தால் வறட்சி, தீ, காடழிப்பு போன்ற காரணங்களினால் மீளும் திறனை இழந்து வருகிறது. இதனை சமீபத்திய ஆய்வுகள் உறுதி செய்துள்ளன. இந்த காடுகளுக்கு மூலாதாரமான மரங்கள் தனது பாரம்பரிய ஆரோக்கியத்தை இழந்து வருகின்றன. இது மிகப்பெரிய ஆபத்தை ஏற்படும் என்கிறார் எக்ஸிடெர் பல்கலைக்கழகத்தின் பேராசிரியரும் புவியியலாளருமான கிறிஸ் போல்டன். இதுகுறித்து போல்டன் கூறுகையில், கடந்த 30 ஆண்டுகளாக செயற்கைக்கோளின் தரவுகளின்படி அமேசான் காடுகளை கண்காணித்துவருகிறோம்.
இந்த தரவுகள் ஆபத்தான போக்கை நமக்கு காட்டுகின்றன. அதாவது காலநிலை மாற்றம், காடழிப்பு, காட்டுத்தீ போன்ற காரணங்களால் ஏற்படும் வறட்சியிலிருந்து அமேசான் மரங்கள் மீண்டு வளர அதிக நேரம் எடுக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இதற்கு முன்பு இதுபோல் நடந்ததில்லை. இது அமேசானின் தனுத்துவமான பல்லுயிர் சூழலுக்கு மிகப்பெரிய பேரழிவை ஏற்படுத்தும்.
மற்றொரு பேராபத்து என்னவென்றால், அமேசான் காடுகளில் உள்ள மரங்கள் கோடிக்கணக்கான டன் கார்பனை-டை-ஆக்ஸைடை உள்வாங்கி ஆக்ஸிஜனாக வெளியிடுகிறது. இந்த செயல்பாட்டில் மாற்றம் ஏற்பட்டால் வளிமண்டலத்தில் வெளியிடப்படும் கார்பனை-டை-ஆக்ஸைடின் அளவு உலகளாவிய சராசரி வெப்பநிலையில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும். காடழிப்பு, நகரமயமாக்குதல் உள்ளிட்ட மனித சுரண்டல்கள் கட்டுப்படுத்தப்பட்டால் உலகின் நுரையீரல் மீழும் வாய்ப்புள்ளது" என்றார்.
இதையும் படிங்க: மீண்டும் மாங்குரோவ் காடுகள்: மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க உத்தரவு