முக அடையாளம் காணும் தொழில்நுட்பம் எனப்படும் Face Recognition techonolgy-ஐ பயன்படுத்தி பொது இடங்களிலுள்ள குற்றவாளிகளை எளிதில் கண்டுபிடிக்கலாம் என்பதால் அமெரிக்கா, ஜப்பான், சீனா உள்ளிட்ட நாடுகளில் காவல் துறையினர் இந்தத் தொழில்நுட்பத்தை அதிகளவில் பயன்படுத்துகின்றனர்.
இருப்பினும், இத்தொழில்நுட்பம் என்பது கருமையான தோல் நிறம் கொண்டவர்களிடம் சரியாக வேலை செய்வதில்லை என்ற குற்றச்சாட்டுகளும் பல ஆண்டுகளாகவே உள்ளன. மேலும், காவல் துறையினர் இந்தத் தொழில்நுட்பத்தை முறைகோடகப் பயன்படுத்துவதாகவும் கூறப்பட்டுவந்தது. இதன் காரணமாக அமெரிக்காவிலுள்ள பல நகரங்கள் முக அடையாளம் காணும் தொழில்நுட்பத்தை காவல் துறையினர் பயன்படுத்த கட்டுப்பாடுகளை விதித்துள்ளன.
முன்னதாக, செவ்வாய்க்கிழமை ஐபிஎம் நிறுவனம், இந்தத் தொழில்நுட்பம் அதிகளவிலான கண்காணிப்பிற்கும், இன ரீதியான அடையாளம் காணுலுக்கும் பயன்படுத்தப்படுவதால், இந்தத் தொழிலில் இருந்து முற்றிலுமாக விலகவுள்ளதாகத் தெரிவித்திருந்தது. இந்நிலையில், அமேசான் நிறுவனம் தனது முக அடையாளம் காணும் தொழில்நுட்பத்தை (Face Recognition) பயன்படுத்த அமெரிக்க காவல் துறைக்கு ஓராண்டு தடை விதித்துள்ளது. இந்தத் தடை எதற்காக விதிக்கப்பட்டது என்பது குறித்து எவ்வித விளக்கத்தையும் அமேசான் அளிக்கவில்லை.
"அமேசானின் இந்த முடிவு வரவேற்கத்தக்கது என்றாலும் முக அடையாளம் காணும் தொழில்நுட்பத்தில் அமேசான் கைதேர்ந்த ஒரு நிறுவனம் அல்ல. ஒரு சில மாகாண காவல் துறையைத் தவிர யாரும் அமேசானின் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவதில்லை. எனவே, இது பெரிய தாக்கத்தை ஏற்படுத்தாது" என்று ஜார்ஜ்டவுன் பல்கலைக்கழகத்தின் தனியுரிமை மற்றும் தொழில்நுட்ப மையத்தின் ஆராய்ச்சியாளர் கிளேர் கார்வி தெரிவித்துள்ளார்.
இந்தத் தொழில்நுட்பம் பொதுமக்களின் தனியுரிமையை மீறும் வகையில் உள்ளதால், இதை அமெரிக்காவில் முற்றிலும் தடைசெய்ய வேண்டும் என்ற கோரிக்கை வலுப்பெற்றுவருகிறது. இருப்பினும், முக அடையாளம் காணும் தொழில்நுட்பத்தை முற்றிலும் தடை செய்வது என்பது சரியான வழிமுறை இல்லை என்றும், இதற்காக உரிய சட்டத்தை அமெரிக்க நாடாளுமன்றம் நிறைவேற்ற வேண்டும் என்றும் பெரு நிறுவனங்கள் கோரிக்கை விடுத்துள்ளன.
இதையும் படிங்க: ’பொறுப்புடன் இருங்கள்...வலியை நிறுத்தங்கள்!’ அமெரிக்க நாடாளுமன்றத்தில் ஜார்ஜ் ஃப்ளாய்ட் சகோதரர்