கடந்த இரண்டு மாதங்களுக்கு மேலாக, வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்புத் தெரிவித்து விவசாயிகள் போராடிவருகின்றனர். அவர்களின் போராட்டத்தைக் கட்டுப்படுத்தும்விதமாக டெல்லி, ஹரியானா ஆகிய மாநிலங்களில் இணைய சேவை முடக்கப்பட்டுள்ளது.
இணைய சேவை முடக்கப்பட்டதற்கும் விவசாயிகளுக்கு ஆதரவாகவும் பாடகர் ரிஹான்னா, சுற்றுச்சூழல் ஆர்வலர் கிரேட்டா தன்பெர்க் ஆகியோர் கருத்து தெரிவித்திருந்தனர்.
இந்நிலையில், டெல்லியில் இணையத்தை முடக்கிவிட்டு எந்தவிதமான மனித உரிமை மீறல்கள் நிகழ்ந்துகொண்டிருக்கின்றன எனப் பிரபல மாடலும் நடிகையுமான மியா கலிபா தெரிவித்துள்ளார்.
விவசாயிகளை கொல்லாதே என்ற வாசகங்கள் அடங்கிய போஸ்டரை வைத்திருக்கும் போராட்டக்காரர்களின் புகைப்படத்தை ட்விட்டரில் பகிர்ந்து இக்கருத்தை அவர் தெரிவித்துள்ளார்.
அதேபோல், அமெரிக்க செய்தி ஊடகமான சி.என்.என். விவசாயிகள் போராட்டம் குறித்த செய்தி ஒன்றை வெளியிட்டுள்ளது. அதைச் சுட்டிக்காட்டிய பாடகி ரிஹான்னா இது போன்ற விஷயங்களை நாம் ஏன் பேச மறுக்கின்றோம் என ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.
விவசாயிகளுக்கு ஆதரவாக நிற்கிறோம் எனச் சுற்றுச்சூழல் ஆர்வலர் கிரேட்டா தன்பெர்க் ட்விட்டரில் கருத்து தெரிவித்துள்ளார். சர்வதேச அளவில் விவசாயிகளின் போராட்டத்திற்கு ஆதரவாக பலர் கருத்து தெரிவித்துவருகின்றனர்.