கரோனா தொற்றின் இரண்டாம் அலை குறைந்துவரும் நிலையில், உலகம் முழுவதும் மெல்ல மெல்ல இயல்பு வாழ்க்கைத் திரும்பிவருகிறது. இதனிடையே கரோனா உருமாற்றம் அடைந்து டெல்டா, டெல்டா பிளஸ் என்று மக்களிடையே பீதியைக் கிளப்பியது.
இந்தத் தொற்றுகளும் ஓய்ந்த நிலையில் உருமாறிய ஒமைக்ரான் வைரஸ் உலக நாடுகளை அச்சுறுத்திவருகிறது. தென் ஆப்பிரிக்காவில் உருவான ஒமைக்ரான் தொற்று, இரண்டு வாரத்தில் 100 நாடுகளுக்கும் மேல் பரவியுள்ளது.
இந்தியாவில் வேகமாகப் பரவிவருகிறது. இப்படிப்பட்ட சூழலில், நாடு முழுவதும் கரோனா தொற்று பாதிப்பு எண்ணிக்கை மீண்டும் அதிகரித்துவருகிறது. ஒமைக்ரான் தொற்று, டெல்டா வைரசைவிட அதிவேகமாகப் பரவிவருகிறது.
இதையடுத்து ஃபிரான்ஸ் நாட்டில் உருமாறிய புதிய வகை கரோனா தொற்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். இது ஒமைக்ரானைவிட அதிக பாதிப்பை ஏற்படுத்தும் எனக் கூறப்படுகிறது. இது 46 உருமாற்றங்களைக் கொண்டுள்ளதாகக் கூறும் ஆராய்ச்சியாளர்கள், ஐ.ஹெச்.யு. பி.1.640.2 என இந்தக் கரோனா வைரஸூக்குப் பெயரிட்டுள்ளனர்.
ஆனால், ஃபிரான்சில் கண்டுபிடிக்கப்பட்ட இந்தப் புதிய வகை கரோனா பிற நாடுகளில் இன்னும் கண்டறியப்படவில்லை. இது குறித்து உலக சுகாதார அமைப்பும் அதிகாரப்பூர்வ தகவல் வெளியிடவில்லை.
இந்நிலையில், தற்போது, கரோனா, ஒமைக்ரானை தொடர்ந்து உருமாறிய வைரஸ் இங்கிலாந்தில் விஞ்ஞானிகளால் கண்டறியப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஒமைக்ரானின் புதிய துணை மாறுபாடான பிஏ-2 வைரஸ் பிரான்ஸ் மற்றும் இந்தியாவில் விரைவில் பரவக்கூடும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க : சென்னையில் குறைந்து வரும் கரோனா பரவல் விகிதம்