அமெரிக்காவின் மினியாபோலிஸ் நகரில், ஜார்ஜ் ஃப்ளாய்ட் என்ற ஆப்பிரிக்க அமெரிக்கரை காவலர் ஒருவர் சுமார் எட்டு நிமிடம் 56 நொடிகள் choke hold எனப்படும் கோரப் பிடியில் வைத்திருந்தார். ஜார்ஜ் ஃப்ளாய்ட் தன்னால் மூச்சுவிட முடியவில்லை என்று பல முறை கதறியும், காவலர் தனது பிடியை தளர்த்தவில்லை. காவலரின் இந்த மூர்க்கத்தனமான செயலால் ஜார்ஜ் ஃப்ளாய்ட் உயிரிழந்தார்.
ஜார்ஜ் ஃப்ளாய்ட் கொல்லப்பட்டதைக் கண்டித்தும் அமெரிக்காவில் ஆப்பிரிக்க அமெரிக்கர்களுக்கு எதிராக அதிகரித்துவரும் வன்முறைகளைக் கண்டித்தும் நாடு முழுவதும் பல்வேறு போராட்டங்கள் நடைபெற்றுவருகின்றன. அதன்படி நியூயார்க் மாகாணத்திலுள்ள பப்பலோ (Buffalo) என்ற நகரிலும் போராட்டம் நடைபெற்றது.
அதில் பங்கேற்ற 75 வயது அமெரிக்கர் ஒருவரை, இரண்டு காவலர்கள் லத்தியைக் கொண்டு தள்ளியதால், அவர் நிலை தடுமாறிய கீழே விழுகிறார். இதனால் அவரது தலையில் காயம் ஏற்பட்டு ரத்தம் சிந்தியதயும், கண்டுகொள்ளாமல் காவலர்கள் முன்னோக்கி நகர்ந்தனர்.
இந்தச் சம்பவத்தை அங்கிருந்த உள்ளூர் தொலைக்காட்சி ஒன்று படம்பிடித்து வெளியிட்டது. இந்த வீடியோ இணையத்திலும் பலரால் பகிரப்பட்டது. அதைத்தொடர்ந்து இரு காவலர்களையும் பணியிடை நீக்கம் செய்த பப்பலோ நகர மேயர் பைரன் பிரவுன், இது குறித்து விராசணை நடத்த உத்தரவிட்டார்.
இது தொடர்பாக பைரன் பிரவுன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "கீழே தள்ளப்பட்ட நபர், காவலர்களின் உதவியுடன் உடனடியாக அருகிலிருந்த எரி கவுண்டி மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். தற்போது அவரது உடல் நிலை சீராக உள்ளது" என்று தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: ஜார்ஜ் ஃப்ளாய்டின் இறுதி நொடிகளை நடித்துக்காட்டி போராட்டம்
!