கனடாவில் கடந்த மாதம் நடைபெற்ற பொதுத் தேர்தலில் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ-வின் லிபரல்ஸ் கட்சி 157 தொகுதியைக் கைப்பற்றி தொடர்ந்து இரண்டாவது முறையாக ஆட்சியைத் தக்கவைத்துள்ளது.
இதனையடுத்து, பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தலைமையிலான அரசு அதன் அமைச்சர்கள் பட்டியலை கடந்த புதன்கிழமை வெளியிட்டது.
இந்தப் பட்டியலில், நவ்தீப் பெய்ன்ஸ், பார்திஷ் சாகர், ஹர்ஜித் சஜ்ஜன், அனிதா ஆனந்த் என நான்கு இந்திய வம்சாவளியினர் இடம்பெற்றுள்ளனர்.
இதில், அனிதா ஆனந்த் தமிழ் வம்சாவளியைச் சேர்ந்தவராவார். கனடா அமைச்சரவையில் தமிழ் வம்சாவளியைச் சேர்ந்த ஒருவர் இடம்பெறுவது இதுவே முதன் முறையாகும்.
வேலூரைச் சேர்ந்த சந்திரம் விவேகானந்த், பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸைச் சேர்ந்த சரோஜ் ராம் தம்பத்துக்குப் பிறந்தவர் அனிதா ஆனந்த். 1967ஆம் ஆண்டு கனடாவில் நோவா ஸ்காஷியா மாகாணத்தில் பிறந்த அனிதா, டொராண்டோ பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக பணிபுரிந்துள்ளார்.
கனடாவின் ஒன்டாரியோ மாகாணத்தில் உள்ள ஓக்வில் ( Oakville) தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற இவருக்கு பொதுப்பணித்துறை அமைச்சகம் வழங்கப்பட்டுள்ளது.
ஜஸ்டின் ட்ரூடோ அமைச்சரவையில் இடம்பெற்ற மற்ற இந்திய வம்சாவளிகள்:
நவ்தீப் பெய்ன்ஸ் - அறிவியல், தொழிற்சாலை மற்றும் இனோவேஷன் அமைச்சர்
பார்திஷ் சாகர் - இளைஞர் நலம், டைவர்சிட்டி மற்றும் இன்க்ளூஷன் அமைச்சர்
ஹர்ஜித் சஜ்ஜன் - தேசிய பாதுகாப்புத் துறை அமைச்சர்
சீக்கிய சமூகத்தைச் சேர்ந்த இவர்கள், ஜஸ்டின் ட்ரூடோவின் முந்தைய ஆட்சியிலும் அமைச்சர்களாக பதவி வகித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க : ஜஸ்டின் ட்ரூடோ 2.0: இந்தியா- கனடா உறவில் தொடரும் பதற்றம்!