ஆந்திராவைச் சேர்ந்த சந்திரசேகர் (44) என்பவர் தனது குடும்பத்துடன் அமெரிக்காவில் வெஸ்ட் டேஸ் மோனிஸ் என்ற நகரத்தில் வசித்துவந்துள்ளார். ஐ.டி. ஊழியரான இவருக்கு ஒரு லாவண்யா சுங்காரா என்ற மனைவியும், 10, 15 வயதில் இரண்டு மகன்கள் உள்ளனர். இந்நிலையில், ஜூன் 15ஆம் தேதி சந்திரசேகரின் நெருங்கிய உறவினர் ஒருவர் அவரது வீட்டிற்குச் சென்றுள்ளார். அப்போது, வீட்டில் இருந்த அனைவரும் இறந்து கிடப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அவர் உடனடியாக காவல் துறையினருக்கு தகவல் கொடுத்துள்ளார்.
இதனையடுத்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர் இறந்து கிடந்த நான்கு பேரின் உடலை மீட்டு உடற்கூறாய்வுக்காக அனுப்பிவைத்தனர். இதுகுறித்து, அமெரிக்க காவல் துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.
இது குறித்து காவல் துறையினர், மே 25ஆம் தேதிதான் இந்த புது வீட்டிற்கு சந்திரசேகர் குடிவந்துள்ளார். ஐ.டி. ஊழியராக பணியாற்றி வரும் இவர் மனநிலை பாதிக்கப்பட்டிருந்ததாகவும், அவரே தனது குடும்பத்தினரை கொலை செய்துவிட்டு தானும் தற்கொலை செய்திருக்கலாம் எனக் அக்கம்பக்கத்தினர் தெரிவித்தாகக் கூறினர்.
இந்நிலையில், சந்திரசேகர் மன அழுத்தத்தில் பாதிக்கப்பட்டு, தனது மனைவி, மகன்கள் இருவரையும் கொலை செய்துவிட்டு அவரும் தற்கொலை செய்துகொண்டதை காவல்துறையினர் உறுதி செய்ததாக கூறப்படுகிறது.