அமெரிக்காவில் கரோனா வைரஸ் பாதிப்பு ருத்ரதாண்டவம் ஆடி வருகிறது. தினந்தோறும் ஆயிரக்கணக்கான மக்கள் உயிரிழந்து வருகின்றனர். வைரஸை கட்டுப்படுத்த முடியாமல் பல நாட்டு அரசுகள் திணறுகின்றன. மனிதர்களை மட்டுமே தாக்கிகொண்டிருந்த கரோனா வைரஸ் , நாய், புலி விலங்குகளையும் தாக்கியுள்ளன. அந்த வரிசையில், நியூயார்க்கை சேர்ந்த இரண்டு பூனை இணைந்துள்ளன.
இந்த இரண்டு பூனைகளை பரிசோதனை செய்த மருத்துவர்கள், லேசான சுவாச நோய் பிரச்னை மட்டுமே உள்ள காரணத்தினால் விரைவில் குணமடைந்துவிடும் என நம்புவதாக தெரிவித்தனர்.
இந்த வைரஸ் பூனைகளுக்கு வீடுகளிலிருந்து அல்லது சுற்றுப்புறங்களில் உள்ளவர்களிடமிருந்து பரவியிருக்கலாம் என கருதப்படுவதாக அமெரிக்க வேளாண்மைத் துறை மற்றும் நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்புக்கான மத்திய மையங்கள் தெரிவித்துள்ளன.
இதுகுறித்து மருத்துவர் கேசி பார்டன் பெஹ்ரவேஷ் (Casey Barton Behravesh) கூறுகையில், ”செல்லப் பிராணிகளை வளர்க்கும் மக்கள் அச்சமடைய தேவையில்லை. பரிசோதனை செய்யவும் வேண்டாம். உங்கள் வீட்டில் வளர்க்கும் செல்லப் பிராணிகளை வெளியாட்கள் யாரும் நெருங்காத வகையில் பார்த்துக்கொள்ளுங்கள். வெளியில் சுற்ற வைக்காதீர்கள். கரோனா பாதிக்கப்பட்ட இரண்டு பூனைகளில் ஒரு பூனையின் முதலாளிக்கு கரோனா தொற்று உறுதியான சிறிது நாள்களில் பூனைக்கு உடல்நிலை மோசமாகியுள்ளது” என்றார்.
இதற்கு முன்னதாக, ஹாங்காங்கில் நாய்க்கும், அமெரிக்காவில் பிராங்க்ஸ் உயிரியல் பூங்காவில் புலி ஒன்றுக்கும் கரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இதுவரை கரோனாவால் பாதிக்கப்பட்ட விலங்குகளுக்கு முதலாளிகள் மூலமாகவே வைரஸ் பரவியிருக்க வாய்ப்புள்ளதாகவும், பூங்காவை பொறுத்தவரை புலியின் காப்பாளருக்கு கரோனா தொற்று இருந்திருக்கலாம் எனவும் கருதப்படுகிறது.
இதையும் படிங்க: உலக சுகாதார மையத்துடன் இணைந்து புதிய ஸ்டிக்கர்களை வெளியிட்ட வாட்ஸ் அப்!