நார்வே தலைநகர் ஆஸ்லோவில் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு இடையே இன்று 2019ஆம் ஆண்டின் அமைதிக்கான நோபல் பரிசு எத்தியோப்பியா பிரதமர் அபி அஹமது அலிக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தப் பரிசுக்கு அரசியல் தலைவர்கள், ஆர்வலர்கள் என 312 நபர்களின் பெயர்கள் பரிந்துரைக்கப்பட்டிருந்த நிலையில், எத்தியோப்பிய பிரதமருக்கு இந்த கௌரவம் கிட்டியுள்ளது.
இதையும் வாசிங்க: இலக்கியத்துக்கான நோபல் பரிசை வென்ற போலந்து, ஆஸ்திரிய எழுத்தாளர்கள்
அப்படி என்ன செய்துவிட்டார் அபி?
எத்தியோப்பிய பிரதமராக 2016இல் பதவியேற்ற அபி அஹமது அலி, அண்டை நாடான எரித்ரியாவுடன் அமைதி ஒப்பந்தமிட்டு அந்நாட்டுடனான 20 ஆண்டுகால எல்லைப் பிரச்னையை முடிவுக்குக் கொண்டு வந்தார்.
இதுதவிர, எதிர்க்கட்சிகள் மீதான தடைகளை நீக்கியும், போர்க் கைதிகளை விடுவித்தும், அரசைக் கண்டித்து நாட்டைவிட்டுத் தப்பிய சென்றவர்களுக்கு பொது மன்னிப்பு வழங்கியும், நாடு திரும்புவதற்கான அனுமதி உள்ளிட்ட பல்வேறு சீர்திருத்தங்களை மேற்கொண்டுள்ளார்.
இதன் மூலம் எத்தியோப்பியாவின் பொருளாதாரம் வளர்ச்சியைடைந்து, அந்நாட்டிலுள்ள 10 கோடி மக்களின் வாழ்வு ஆதாரத்தை மேம்படுத்தமுடியும் என பிரதமர் அபி அஹமது அலி கருதுகிறார்.
மேலும் எத்தியோப்பியாவில் பல முக்கிய சீர்திருத்தங்கள் கொண்டு வந்ததன் மூலம் அந்நாட்டு மக்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்தியுள்ளார்.
எத்தியோப்பியாவில் ஒற்றுமை, சமூக நீதி, சமரசம் ஆகியவற்றை வளர்ப்பதற்கு பிரதமர் அபி அஹமது அலி முயன்று வருகிறார்.
"கிழக்கு மற்றும் வடகிழக்கு ஆப்ரிக்க பிராந்தியத்தில் அமைதி, சமரசத்திற்காக பாடுபட்டு வரும் அனைத்து தரப்பினரையும் கௌரவிப்பதற்கும் இந்த பரிசானது வழங்கப்பட்டுள்ளது" என நார்வேஜியன் நோபல் கமிட்டி தெரிவித்துள்ளது.
நோபல் அமைதி பரிசை வென்ற ஆப்ரிக்கத் தலைவர்கள்:
முன்னாள் தென் ஆப்ரிக்க அதிபர்கள் நெல்சன் மண்டேலா(1993), ஆல்பர்ட் ஜான் லூத்துலி (1960), முன்னாள் லிபேரியா அதிபர் எலன் ஜான்சன் சர்லீப் (2011) ஆகியோர் நோபல் அமைதிப் பரிசை வென்றுள்ளனர்.