சீனாவில் கண்டறியப்பட்ட கோவிட்-19 தொற்று எந்தவித பாரபட்சமுமின்றி அனைத்து நாடுகளிலும் வேகமாக பரவுகிறது. வல்லரசு நாடான அமெரிக்காவும், பொருளாதாரத்தில் பின்தங்கிய தென் ஆப்பிரிக்காவிலும் சரி இத்தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துவருகிறது.
இத்தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள அனைத்து நாடுகளிலும் பொருளதாரம் கடுமையாக சரிவடைந்துள்ளன. அந்தவகையில், தென் ஆப்பிரிக்காவில் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள பொருளாதாரத்தை சரிசெய்யும் வகையில் 500 பில்லியன் ராண்ட் (26 பில்லியன் அமெரிக்க டாலர்) சிறப்பு பட்ஜெட்டை ஒதுக்கியுள்ளதாக அந்நாட்டு அதிபர் சிரில் ராமபோசா அறிவித்துள்ளார்.
இது குறித்து அவர் கூறுகையில்,
"நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 10 விழுக்காடுதான் இந்த பட்ஜெட். வரவிருக்கும் நாள்களில் இந்த பட்ஜெட் முழுமையாக விவரிக்கப்பட்டும். ஆனால் தற்போதைய இக்கட்டான சூழ்நிலையில் கோவிட் 19 தொற்றுக்கு எதிராக போராடவும், வாழ முடியாமல் தவித்துவரும் லட்சக்கணக்கான மக்களின் பசியை போக்குவதற்கும்தான் இந்த பட்ஜெட் முதன்மையாக பயன்படும்.
அடுத்த ஆறு மாதங்களில் நாட்டில் மோசமாக பாதிக்கப்படும் மக்களுக்கு இந்த பட்ஜெட்டிலிருந்து பத்தில் ஒரு பங்கு செலவழிக்கப்படும். கோவிட்-19 தொற்று பரவலுக்கு முன்பே தென் ஆப்பிரிக்காவில் பல நிறுவனங்கள் பொருளாதார நெருக்கடியைச் சந்தித்தன. அதனால் அங்கு பணிபுரியும் ஊழியர்களின் வாழ்வாதாரத்துக்கும் முன்னுரிமை வழங்கப்படும்.
ஏற்கனவே கோவிட் -19 தொற்றால் ஏராளமானோர் வேலை வாய்ப்புகளை இழந்துள்ளனர். நாட்டில் ஏற்கனவே வேலையின்மை 28 விழுக்காடாக உள்ளது. வரவிருக்கும் வாரங்கள், மாதங்களிலும் இத்தொற்றால் ஏற்படும் பாதிப்புகள் அதிகரிக்கும்.
நாட்டில் மே 1ஆம் தேதிவரை அமலில் உள்ள ஊரடங்கு உத்தரவு மேலும் நீட்டிக்கப்பட அதிக வாய்ப்புகள் உள்ளன. ஒருவேளை ஊரடங்கை தளர்த்தப்பட்டால் இத்தொற்றால் நாட்டில் கடுமையான விளைவுள் நேரிடும்" என்றார்.
இதையும் படிங்க: