20ஆம் நூற்றாண்டில் நம்முடன் புவியைப் பகிர்ந்த, பல உயிரினங்களை நாம் நிரந்தரமாக அழித்துவிட்டோம். மனிதனின் பேராசை காரணமாக பல்வேறு உயிரினங்களை இப்போதும் அழித்து வருகிறோம். சைபீரியன் புலிகள், நீலத் திமிங்கலங்கள் உள்ளிட்ட பல்வேறு உயிரினங்களும் தற்போது அழியும் நிலையில் உள்ளன.
அதன்படி உலகில் மிக அரிய உயிரினங்களில் ஒன்றாகக் கருதப்படும் வெள்ளை ஒட்டகச்சிவிங்கிகள் தற்போது கென்யாவில் வேட்டையாடப்பட்டுள்ளன.
கிழக்கு கென்யாவிலுள்ள கரிசா என்றப் பகுதியில், இரண்டு வெள்ளை ஒட்டகச்சிவிங்கிகளின் எலும்புக்கூடுகளை கென்ய வனத் துறையினர் கண்டுபிடித்தனர்.
எலும்புக் கூடுகளை பரிசோதித்த மருத்துவர்கள், அவை கொல்லப்பட்டு இரண்டு மாதங்கள் ஆகியிருக்கலாம் என்று தெரிவித்தனர். மேலும், அவற்றில் ஒன்று பெண் ஒட்டகச்சிவிங்கி என்றும்; மற்றொன்று அதன் குட்டியாக இருக்கலாம் என்றும் அவர்கள் தெரிவித்தனர்.
உலகில் இருக்கும் கடைசி பெண் வெள்ளை ஒட்டகச்சிவிங்கியாக இது இருக்கலாம் என்றும் அஞ்சப்படுகிறது.
அப்படி இது கடைசி பெண் வெள்ளை ஒட்டகச்சிவிங்கியாக இருக்குமானால், வெள்ளை ஒட்டகச்சிவிங்கிகள் என்ற இனத்தை மீட்டெடுப்பது கிட்டத்தட்ட முடியாததாகிவிடும்.
ஒட்டகச்சிவிங்கிகள் இப்படி வெள்ளை நிறத்தில் இருப்பதற்கு மரபணு மாற்றங்களே காரணம் என்று கூறும் விலங்குகள் நிபுணர்கள், இவை அதன் உடலுக்கு வேறு எந்த குறைபாடுகளையும் ஏற்படுத்தவில்லை என்றாலும்; இந்த நிறத்தின் காரணமாகவே, அவை வேட்டைக்காரர்களால் குறிவைக்கப்படுகிறது என்றும் வேதனை தெரிவிக்கின்றனர்.
இதையும் படிங்க: தண்ணீர் பஞ்சத்தால் அழியும் வனவிலங்குகள்!