நைரோபி(கென்யா): மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் 3 நாள் அரசுமுறைப் பயணமாக ஆப்பிரிக்க நாடான கென்யாவுக்குச் சென்றுள்ளார். அவரை, அந்நாட்டின் வெளியுறவு விவகாரங்களுக்கான தலைமை நிர்வாக அலுவலர் அபாபு நமவாம்பா வரவேற்றார்.
தொடர்ந்து, பிராந்திய மற்றும் உலகளாவிய பிரச்னைகள் குறித்தும், இருநாட்டிற்கு இடையிலான உறவை மேலும் வலுப்படுத்துவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்தும் கென்யா வெளியுறவுத் துறை அமைப்புச் செயலாளர் ரேச்செல் ஓம்மோவுடன், ஜெய்சங்கர் ஆலோசனை நடத்தினார்.
மேலும், இந்தியா - கென்யா இரு தரப்பு உறவுகளை வலுப்படுத்துவதற்காகத் தொடர்ச்சியான சந்திப்புகளை ஜெய்சங்கர் நடத்துவார் என்று அங்குள்ள இந்தியத் தூதரகம் தெரிவித்துள்ளது.
இந்தியாவிற்கும் கென்யாவிற்கும் இடையிலான முக்கியமான பாலமாக விளங்கும் இந்திய, கென்ய கூட்டு கமிஷனின் கூட்டத்திலும் அவர் கலந்து கொள்வார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவும், கென்யாவும் ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலின் உறுப்பு நாடுகளாகப் பணியாற்றி வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.