கரோனா வைரஸ் பாதிப்பு ஐரோப்பா, அமெரிக்க, ஆசிய கண்டங்களை வெகுவாக பாதித்துவரும் நிலையில், ஆப்ரிக்காவில் இதன் தாக்கம் மெல்ல தலைதூக்கத் தொடங்கியுள்ளது.
கடந்த 10 நாட்களுக்கு முன்னர் உலக சுகாதார அமைப்பு ஆப்பிரிக்காவிலும் கரோனா பாதிப்பு ஏற்படும் அபாயம் உள்ளதால் அந்நாடு அவசர கால நடவடிக்கையில் இறங்கி தீவிரமாக செயல்பட வேண்டும் எனத் தெரிவித்துள்ளது.
ஆனால் பொருளாதார ரீதியாக மிகவும் பின்தங்கியுள்ள ஆப்பிரிக்க நாடுகள் இந்நோயை எதிர்கொள்ளும் சுகாதார கட்டமைப்பு வசதிகள் பெற்றிருக்கவில்லை. எனவே வெளிநாட்டிலிருந்து வந்த பயணிகளை கண்டறிந்து சோதனை மேற்கொண்டு விரைந்து தனிமைப்படுத்த வேண்டும் என உலக சுகாதார அமைப்பு தெரிவித்தது.
இருப்பினும் ஆப்பிரிக்காவில் தற்போது கரோனா பாதிப்பு எண்ணிக்கை வேகமாக தலைதூக்க தொடங்கியுள்ளது. இதுவரை 2 ஆயிரத்து 850 பேர் கரோனா பாதிப்பில் உள்ளதாகவும், 73 பேர் கரோனாவால் உயிரிழந்துள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த எண்ணிக்கை அச்சுறுத்துவதாக உள்ளதாகவும், நிலைமையைக் கட்டுக்குள் கொண்டுவரும் காலக்கெடு மெல்ல குறைந்துவருவதாகவும் உலக சுகாதார அமைப்பின் ஆப்பிரிக்க பிரந்திய தலைவர் மத்ஷிதோ மோய்தி கவலைத் தெரிவித்துள்ளார்.
ஆப்ரிக்க கண்டத்தை பொறுத்தவரை தென்னாப்பிரிக்கா மூன்று வார லாக் டவுனையும், கென்யா இரவு நேர ஊரடங்கையும் அறிவித்துள்ளது.
இதையும் படிங்க: கரோனா: அறமற்ற அலட்சியத்தால் பாமரர்களைப் படுகுழியில் தள்ளாதீர்கள்