கம்போடியாவில் உள்ள சிஹனோக்வில் நகரில் பாதி வேலைகள் முடிவுற்ற நிலையில் இருந்த ஏழு மாடிக் கட்டிடம் சரிந்து விழுந்தது. இந்த விபத்தில் 3 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர். மேலும், 18 பேர் படுகாயமடைந்தனர்.
இது குறித்து கம்போடியா அரசு அலுவலர்கள், ‘சீன நாட்டினைச் சேர்ந்த ஒருவர் இக்கட்டிடத்தைக் கட்டிவந்தார். கம்போடிய நேரப்படி அதிகாலை 4 மணிக்கு கட்டிடம் இடிந்து விபத்துக்குள்ளாகியது. கம்போடிய கூலித் தொழிலாளிகள் பாதி முடிவுற்ற நிலையில் இருந்த இக்கட்டிடத்தை இரவில் தூங்குவதற்கு பயன்படுத்தி வந்துள்ளனர். விபத்தில் பலியானவர்களுக்கு அரசு தரப்பிலிருந்து நிவாரணம் வழங்கப்படும். இவ்விபத்து குறித்து வழக்குப் பதிவு செய்து, கட்டிட உரிமையாளரிடம் தீவிர விசாரணை மேற்கொண்டுவருகிறோம்’ என்றனர்.