ஆப்பிரிக்கா நாடான ஜிம்பாப்வேயில் உள்ள சிண்ட்ரெல்லா (Sinderela) கிராமத்தில் நீரோடை ஒன்று இருக்கிறது. அங்கு இரண்டு நாள்களுக்கு முன்பு ஏழு சிறுவர்கள் நீச்சலடிக்கச் சென்றுள்ளனர். அப்போது தண்ணீருக்குள் முதலை வருவதைப் பார்த்ததும் சிறுவர்கள் அலறியடித்து வெளியே ஓடிவந்துள்ளனர்.
ஆனால் ஒன்பது வயதுள்ள லட்டோயா முவானியின் (Latoya Muwani) கை, கால்களை முதலை விடாமல் கவ்விப்பிடித்து வைத்திருந்துள்ளதால் வலியில் கதறியுள்ளார். இதனைப் பார்த்த 11 வயதுள்ள ரெசப்கா (Recebbca) என்ற சிறுமி தனது தோழியைக் காப்பாற்றுவதற்கு சிறிதும் யோசிக்காமல் முதலையின் பின்புறமாக கண்ணிமைக்கும் நேரத்தில் பாய்ந்துள்ளார்.
பின்னர் சிறுமி தோழியை விடும்வரை தனது விரல்களை முதலையின் கண்களில் ஆழமாகக் குத்தியுள்ளார். இதையடுத்து, வலி தாங்கமுடியாத முதலை, முவானியின் கை கால்களை விட்டு விலகி நகர்ந்து சென்றது. பின்னர் நண்பர்களின் உதவியோடு முவானியை ரெசப்கா கரைக்கு இழுத்துவந்தார்.
இது குறித்து ரெசப்கா கூறுகையில், "நீச்சல் செய்த ஏழு நபர்களில் நான்தான் வயதில் மூத்தவள். எனது நண்பர்களைக் காப்பாற்ற வேண்டிய கட்டாயத்திலிருந்தேன். அவள் நீந்திவர முடியாமல் தவித்தால் உடனடியாகத் தண்ணீருக்குள் இறங்கி முதலையின் கண்களில் தொடர்ச்சியாகக் குத்தி அவளை விடுவிக்கச் செய்து கரைப் பகுதிக்கு இழுத்துவந்தேன்" எனத் தெரிவித்தார்.
இச்சம்பவத்தில் சிறுமி முவானிக்கு காயங்கள் ஏற்பட்டதால் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்றுவருகிறார். மேலும் ரெசப்காவுக்கு நல்வாய்ப்பாக காயங்கள் எதுவும் ஏற்படவில்லை. 11 வயது சிறுமியின் தைரியத்தைப் பலரும் பாராட்டிவருகின்றனர்.