இது குறித்து துணை காவல் ஆணையர் (சிறப்பு செல்) சஞ்சீவ் குமார் யாதவ் கூறுகையில், " தடைசெய்யப்பட்ட பயங்ரவாத அமைப்பான காலிஸ்தானைச் சேர்ந்த இருவரும் பஞ்சாப்பில் மோகா மாவட்டத்தில் வசிக்கும் இந்தர்ஜீத் சிங் கில் (31), ஜஸ்பால் சிங் (27) என அடையாளம் காணப்பட்டுள்ளனர். மோகாவில் பதிவு செய்யப்பட்ட தேசத்துரோக வழக்கில் அவர்கள் தொடர்புடையவர்கள் ஆவர்.
சுதந்திர தினத்தை முன்னிட்டு இருவரும் பஞ்சாப்பின் மோகா மாவட்டத்தில் உள்ள துணை காவல் ஆணையர் அலுவலகத்தின் மொட்டை மாடியில் 'காலிஸ்தான்' கொடியை உயர்த்தியதாகவும், அதன் வளாகத்தில் உள்ள இந்தியக் கொடியைக் கிழித்ததாகவும் கூறப்படுகிறது.
சனிக்கிழமையன்று (ஆகஸ்ட் 29), காலிஸ்தான் ஜிந்தாபாத் படையின் இரண்டு உறுப்பினர்கள் தங்களது வெளிநாட்டுத் தளபதிகளின் அறிவுறுத்தலின் பேரில் சில தேச விரோத நடவடிக்கைகளைச் செய்ய டெல்லிக்கு வருவார்கள் என்று காவல் துறையினருக்குத் தகவல் கிடைத்தது.
தகவலைத் தொடர்ந்து, ஜி.டி. கர்னல் சாலையில் உள்ள ஒரு கோயில் அருகே காவல் துறையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர்.
அப்போது, மாலை 6.30 மணியளவில், சனி மந்தீர் பேருந்து நிலையம் அருகே நின்றுகொண்டிருந்த இரண்டு நபர்களை விசாரணை செய்த போது முன்னுக்குப்பின் முரணாக பதிலளித்தனர். இதனால் சந்தேகமடைந்த காவல் துறையினர் அவர்கள் இருவரையும் கைது செய்தனர்.
பின்னர் விசாரணையின் போது, இந்தர்ஜீத் சிங் கில் ஒரு டிரைவராகப் பணிபுரிவது தெரிய வந்தது. கில் ஆகஸ்ட் 9ஆம் தேதி, ஒரு வாட்ஸ்அப் இணைப்பைப் பெற்றார். அங்கு அவர் 'காலிஸ்தானு'க்கு வாக்களித்துள்ளார். அப்போது அமெரிக்காவைச் சேர்ந்த ராணா என்ற நபரும் மற்றொரு நபரும் இந்தியாவுக்கு எதிரான சேனலில் சொற்பொழிவுகளை நிகழ்த்தியதாகவும், சீக்கிய இளைஞர்களிடம் 'காலிஸ்தான்' குறித்து காட்டவும், 'காலிஸ்தான்' கொடியை அசைக்கவும், இந்தியக் கொடியை கிழிக்கவும் கட்டளையிட்டதாகவும் தெரிகிறது.
அதன்படி, 'காலிஸ்தான்' கொடியை அசைத்ததற்காகவும், மோகாவில் இந்தியக் கொடியைக் கிழித்ததற்காகவும் 2,500 அமெரிக்க டாலர் பரிசையும்; செங்கோட்டை மற்றும் இன்னபிற வரலாற்றுக் கட்டடங்களில், இதைச் செய்ததற்காக 1 லட்சத்து 25 ஆயிரம் அமெரிக்க டாலர் பரிசுத் தொகையையும் ராணா இணைய சேனலில் அறிவித்துள்ளார்.
இதனால், ஆகஸ்ட் 14ஆம் தேதி அதிகாலையில், இந்தர்ஜீத் சிங் கில், ஜஸ்பால் சிங், ஆகாஷ் தீப் சிங் ஆகியோருடன் துணை காவல் ஆணையர் அலுவலகத்திற்குச் சென்றார். கில் மற்றும் ஜஸ்பால் சிங் மொட்டை மாடிக்குச் சென்று 'காலிஸ்தான்' கொடியை ஏற்றினர்.
அதன்பிறகு, அவர்கள் இந்தியக் கொடியைத் தாழ்த்தி துண்டுகளாகக் கிழித்தனர். துணை காவல் ஆணையர் அலுவலகத்திற்கு வெளியே நின்று கொண்டிருந்த ஆகாஷ்தீப் சிங், இதனை ஒரு காணொலியாகப் பதிவு செய்து, அதை வாட்ஸ்அப்பில் ராணாவிற்கு அனுப்பியுள்ளனர்.
ஓரிரு நாள்களுக்குப் பிறகு, ஆகாஷ்தீப் சிங் மோகா காவல் துறையினரால் கைது செய்யப்பட்டார். அன்றிலிருந்து இந்தர்ஜீத் சிங் கில் மற்றும் ஜஸ்பால் சிங் ஆகியோர் தலைமறைவாக இருந்தனர். பின்னர் அவர்கள் நேபாளம் சென்று பயிற்சிக்காக பாகிஸ்தானை அடையத் திட்டமிட்டிருந்தனர். இந்நிலையில், அவர்கள் இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் இது குறித்து பஞ்சாப் காவல் துறையினருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது' என்றார்.