தெலங்கானாவை சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் அனுமுலா ரேவந்த் ரெட்டி தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் தென்மண்டல அமர்வில் தாக்கல் செய்துள்ள மனுவில், “நீர்பிடிப்பு பகுதியான ஓஸ்மான் சாகர் ஏரியை தெலங்கானா முதலமைச்சரின் மகன் ஆக்கிரமித்து பன்ணை வீடு கட்டியுள்ளார்.
ஏரி ஆக்கிரமிக்கப்பட்டது தொடர்பாக சிறப்பு குழு அமைத்து விசாரணை நடத்த வேண்டும். ஏரி ஆக்கிரமிப்புக்கு உறுதுணையாக இருந்த அதிகாரிகள் மீது குற்ற நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும்” என குறிப்பிட்டிந்தார்.
இந்த வழக்கை விசாரணைக்கு ஏற்ற பசுமை தீர்ப்பாயத்தின் நீதித்துறை உறுப்பினர் ராமகிருஷ்ணன், நிபுணத்துவ உறுப்பினர் சாய்பால் தாஸ்குப்தா அமர்வு, ஏரி ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளதா? என்பது குறித்து ஆராய சென்னை மண்டல சுற்றுச்சூழல் துறை அலுவலர், தெலங்கானா மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அலுவலர், பெருநகர ஹைதராபாத் மாநகராட்சி ஆணையர், ஹைதராபாத் குடிநீர் வழங்கல் துறை கன்காணிப்பு பொறியாளர், தெலங்கானா நீர்பாசனத்துறை கன்காணிப்பு பொறியாளர், ஹைதராபாத் ஏரி மற்றும் நீர் ஆதாரங்கள் துறை ஆகியோர்கள் இடம்பெற்றிருந்த சிறப்பு குழுவை அமைத்துள்ளது.
இந்தக் குழு, ஏரி ஆக்கிரமிப்பு செய்யப்பட்டதாக கூறப்படும் இடத்தை நேரில் ஆய்வு செய்து, 2018ஆம் ஆண்டு பசுமை தீர்ப்பாயம் வழங்கிய உத்தரவு நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதா? அல்லது மீறப்பட்டுள்ளதா? நீர்பிடிப்பு பகுதியில் கட்டுமான பணியை மேற்கொள்ள யார் அனுமதி அளித்தது? என ஆய்வு செய்யும்.
சிறப்பு குழுவிற்கு தேவையான உதவிகளை ஹைதராபாத் ஏரி மற்றும் நீர் ஆதாரங்கள் துறை செய்து கொடுக்க வேண்டும். சிறப்பு குழு தனது ஆய்வுகளை இரண்டு மாதத்தில் முடித்து ஆகஸ்ட் 26ஆம் தேதி அறிக்கையை சமர்பிக்க வேண்டும் எனவும் உத்தரவிட்டனர்.
இதையும் படிங்க: மின்சார திருத்த மசோதாவுக்கு கே.சி.ஆர். எதிர்ப்பு!