பாஜக எம்எல்ஏக்களின் ஆலோசனை கூட்டம் கட்சி தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது.இதில் புதுச்சேரியில் என்.ஆர்.காங்கிரஸ்-பாஜக கூட்டணி அரசு அமைவது குறித்து ஆலோசிக்கப்பட்டது.
பின்னர் பாஜக மேலிட பொறுப்பாளர்களான நிர்மல் குமார் சுரானா,ராஜீவ் சந்திரசேகர் எம்பி,பாஜக தலைவர் சாமிநாதன் ஆகியோர்
செய்தியாளர்களைச் சந்தித்தனர். அப்போது பாஜக தலைவர் சாமிநாதன் கூறுகையில், "2001ஆம் ஆண்டில் பாஜக எம்எல்ஏவாக கிருஷ்ணமூர்த்தி தேர்வு செய்யப்பட்டார்.20 ஆண்டுகளுக்கு பிறகு பாஜக சட்டப்பேரவை உறுப்பினர்கள் சட்டபேரவைக்கு செல்கின்றனர்.
காங்கிரஸ் கட்சிக்கு எதிர்கட்சி அந்துஸ்து இல்லாத நிலை உருவாகி விட்டது. புதுச்சேரியில் பாஜக அசைக்க முடியாத சக்தியாக மாறியுள்ளது" என்றார்.
பாஜக மேலிட பொறுப்பாளர் நிர்மல் குமார் சுரானா கூறுகையில், "புதுச்சேரியில் முதல்முறையாக அமைச்சரவையில் பாஜக இடம் பெறுகிறது. 2016 ல் ஒரு இடம் கூட பாஜக பெறவில்லை. பாஜகவை கேலி செய்த காங்கிரசுக்கு இரு இடம் மட்டுமே மக்கள் அளித்துள்ளனர்.
பூஜ்ஜியத்தில் இருந்த பாஜக அமைச்சரவையில் இடம் பெறும் அளவிற்கு உயர்ந்துள்ளது. புதுச்சேரியை மாதிரி மாநிலமாக மாற்றுவோம். ரங்கசாமி தலைமையில்தான் தேர்தலை சந்தித்து சிறப்பான வெற்றியை பெற்றுள்ளதாக கூறினார்.