சென்னை தலைமைச் செயலக காலனி காவல் ஆய்வாளர் ராஜேஷ்வரி, வழக்கம்போல் வாகன ரோந்தில் ஈடுபட்டிருந்தார். அப்போது அங்கிருந்த குப்பைத் தொட்டி முன்பு இளம்பெண் ஒருவர் அழுக்கான உடை அணிந்து அமர்ந்திருந்தார்.
இளம்பெண்ணை கண்ட காவல் ஆய்வாளர், பெண் அருகே சென்று பேசினார். அப்போது சம்பந்தப்பட்ட பெண் சற்று மனநலம் பாதிக்கப்பட்டவர் என்பது அவருக்குத் தெரியவந்தது.
உடனே இளம்பெண்னை காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று, குளிக்க வைத்து புத்தம் புது ஆடையை வாங்கி அணிவித்துள்ளார். பின்னர் தொடர்ந்து பெண் குறித்து விசாரிக்கும்போது, அவரது பெயர் பாரதி எனவும், சென்னை புளியந்தோப்பில் உள்ள அத்தை வீட்டில் வசித்து வந்ததும் தெரியவந்தது.
இதையடுத்து பெண்ணின் உறவினர்களை தொடர்பு கொண்டு காவல் ஆய்வாளர் பேசியபோது, பாரதியின் தந்தை நுங்கம்பாக்கத்தில் உள்ள சாஸ்திரி பவனில் பணிபுரிந்து விட்டு, கடந்த 2016 ஆம் ஆண்டு ஓய்வு பெற்றவர் என்பதும், தற்போது பாரதியின் தந்தையும், தாயும் இறந்துபோயிவிட்டனர் என்பதும், பாரதியுடன் பிறந்த இரண்டு சகோதரிகளில் ஒருவர் இறந்துவிட்டதும், மற்றொருவர் திருமணம் செய்து தற்போது வாழ்ந்து வருவதும் தெரியவந்துள்ளது.
இதைத்தொடர்ந்து, தற்போது வசித்துவரும் சகோதரியை தொடர்பு கொண்ட காவல் ஆய்வாளர் மகேஷ்வரி விசாரணை நடத்தியதில், பாரதியின் மூத்த அக்கா மஞ்சுளா தேவி, தீவிரமான கிரிக்கெட் ரசிகையாக இருந்து வந்ததும், யுவராஜ் சிங்கை தான் திருமணம் செய்வேன் என்று உறுதியாக இருந்தாகவும், பின்னர் அவருக்கு பெற்றோர் கடந்த 2008 ஆண்டு திருமணம் நிச்சயம் செய்த மறுநாளே அவர் தற்கொலை செய்து இறந்துவிட்டதையும் ஆய்வாளரிடம் தெரிவித்துள்ளார்.
மேலும் பாரதி கல்லூரி படிக்கும் போதே தீவிரமான சினிமா ரசிகை, அதிலும் பாலிவுட் நடிகர் அபிஷேக் பச்சானை தான் திருமணம் செய்து கொள்வேன் என்று சுற்றி வந்துள்ளார். பி.எஸ்.சி பட்டபடிப்பை முடித்தவுடன் பாரதிக்கு திருமணத்திற்கு மணமகன் பார்க்கும்போது, அபிஷேக்கை தான் திருமணம் செய்து கொள்வேன் என தொடர்ந்து கூறியதோடு, நாளடைவில் மனநலம் பாதிக்கப்பட்டவராக தனது தங்கை பாரதி மாறியதையும் காவல் ஆய்வாளரிடம் தெரிவித்துள்ளார்.
மீட்கப்பட்ட பட்டதாரி பெண்ணான பாரதியை, அவரது சகோதரியிடம் ஒப்படைக்க முயன்றபோது, தன்னால் பார்க்க முடியாது என்றும், பலமுறை சொல்லாமல் வெளியே ஓடிச் சென்றுள்ளார் என்றும், மருத்துவமனையில் சேர்த்து அவருக்குச் சிகிச்சை அளிக்கவும் தன்னிடம் பணம் இல்லை என்று கூறியுள்ளார்.
இதையடுத்து பல்வேறு காப்பகத்திற்கு தொடர்பு கொண்டு பேசிய போது, தற்போது கரோனா என்பதால் யாரையும் சேர்ப்பதில்லை என்று காப்பாக நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர். இதைத்தொடர்ந்து, மாநகராட்சி காப்பகத்தில் தனக்கு தெரிந்த நண்பரை தொடர்புக்கொண்டு, பட்டதாரி பெண்ணான பாரதியை, கரோனா பரிசோதனை செய்த பின்பு ஒப்படைத்துள்ளார்.
காவல் ஆய்வாளரின் இந்த உதவியை அறிந்த அப்பகுதி பொதுமக்கள், உடன் பணிபுரியும் அலுவலர்கள் வெகுவாக பாராட்டி வருகின்றனர். பாலிவுட் நடிகர் மீது தீராத காதல் மோகத்தால் பட்டதாரி பெண் மனநலம் பாதிக்கப்பட்டு, தெருவில் சுற்றித் திரிந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.