பாகிஸ்தானின் வர்த்தக தலைநகரான கராச்சியில் இயங்கிவரும் பங்குச் சந்தை மீது நேற்று (ஜூன் 30) நடத்தப்பட்ட வெடிக்குண்டுத் தாக்குதலில் 11 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலுக்கு பலுச் விடுதலைப் படை காரணம் என குற்றஞ்சாட்டப்பட்டது. இந்நிலையில், அதனை பலுச் விடுதலை படையின் செய்தித் தொடர்பாளர் அசாத் பலுச் மறுத்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "பலுச் விடுதலைப் படைதான் இந்த தாக்குதலுக்கு காரணமென எங்கள் மீது குற்றச்சாட்டு முன் வைக்கப்படுவதை நாங்கள் வன்மையாக கண்டிக்கிறோம். தாக்குதலில் ஈடுபட்டவர்களாக ஊடகங்களில் அடையாளப்படுத்தப்பட்டவர்களுக்கும், பலுச் விடுதலைப் படையிக்கும் தொடர்பில்லை. அவர்கள் அமைப்பிலிருந்து வெளியேற்றப்பட்டவர்கள்.
தாக்குதலில் ஈடுபடுத்தப்பட்ட இளைஞர்கள் ஒருபோதும் பலுச் விடுதலைப் படையின் ஒரு பகுதியாக இருக்கவில்லை. மக்களைத் தாக்குவது எங்கள் செயல் உத்தின் ஒரு பகுதியல்ல. எங்கள் வழக்கமும் அதுவல்ல" என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாகிஸ்தானின் கராச்சிக்கு அருகிலுள்ள தெற்கு சிந்து மாகாணத்தின் எல்லையாக இருக்கும் பகுதியைச் சேர்ந்த நிலப்பகுதியை பலுசிஸ்தான் என அழைக்கிறார்கள். எண்ணெய் வளம் மிகுந்த அந்த மாகாணத்தில் பாகிஸ்தான் - ஆப்கானிஸ்தான் ஆகிய இரு அரசுகளை எதிர்த்து ஏறத்தாழ 70 ஆண்டுகளுக்கும் மேலாக சுதந்திரம் போராட்டம் நடைபெற்று வருகிறது.
இந்த விடுதலை போராட்டத்தை முன்னெடுக்கும் அமைப்புகளில் பலுச் விடுதலைப் படையும் ஒன்றாகும். கடந்த 2018ஆம் ஆண்டு நவம்பரில் சீனத் தூதரகம் மீது பலுச் விடுதலைப் படையால் தாக்குதல் நடத்தப்பட்டது கவனிக்கத்தக்கது.