டிஆர்பி ரேட்டிங்கில் தொடர்ந்து முதல் இடத்தைப் பிடித்து வரும் நிகழ்ச்சியான பிக்பாஸின் 6ஆவது சீசன் இன்று (அக்-9) முதல் ஒளிபரப்பாக உள்ளது. இந்நிலையில் இந்த நிகழ்ச்சிக்கான போட்டியாளர்கள் குறித்து தகவல்கள் வெளியாகத் தொடங்கியுள்ளன.
இதுவரை நடந்த 5 சீசன்களையும் நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கினார். இருப்பினும் 5 சீசன் போட்டியாளர்கள் இணைந்து பங்கேற்ற பிக்பாஸ் அல்டிமேட்டில் பாதியில் கமல்ஹாசனால் தொகுத்து வழங்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டதால், நடிகர் சிலம்பரசன் இந்நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கினார்.
இதுவரை வெளியான சீசனில் இருந்து ஓவியா, ஆரி, மற்றும் பலருக்கு ரசிகர்கள் குவிந்து அவர்களுக்கென தனியாக ஆர்மியே உருவாக்கி கொண்டாடினார். பிக்பாஸ் நிகழ்ச்சியில் சர்ச்சைகளுக்கும், சுவாரஸ்யங்களுக்கும் என்றைக்கும் பஞ்சம் இருந்ததில்லை. அந்த வகையில் தற்போது பலர் இந்த நிகழ்ச்சிக்காக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.
பிரபலங்கள் தவிர, பொதுமக்கள் சிலரும் இந்த சீசனில் களமிறங்க உள்ளதாக புரோமோக்கள் வெளியாகியுள்ளன. பிக்பாஸ் புரோமோ வர ஆரம்பித்ததில் இருந்து பல இடங்களில் ஆடிஷன் நடத்தப்பட்டு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். பிக்பாஸ் ஆரம்பித்த முதல் சீசனில் இருந்தே பல தரப்பு ரசிகர்களும் இந்த நிகழ்ச்சியை விரும்ப ஆரம்பித்தனர்.
தொடர்ந்து 5ஆவது சீசன் வரை ஒளிபரப்பப்பட்டது. இதன் மூலம் ஜொலித்த பிரபலங்கள் பலர் சினிமாவிலும் பலர் படங்களில் நடித்து வருகின்றனர். தற்போது இந்த சீசனில் கலந்து கொள்ளும் போட்டியாளர்கள் குறித்தான யூகங்கள் தொடங்கி விட்டன.
அதில் சரவணன் மீனாட்சி தொடர் மூலம் பிரபலமடைந்த நடிகை ரக்சிதா, குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் பங்கேற்பாளர்கள் ரோஷினி, தர்ஷன், தொகுப்பாளர் ரக்ஷன், பிரபல யூ-ட்யூபர் ஜிபி முத்து ஆகியோர் கலந்து கொள்ள உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இருப்பினும் இது குறித்த உறுதியான தகவல்கள் இன்று (அக்-9) நடக்க இருக்கும் நிகழ்ச்சிக்குப் பின்னரே அறிவிக்கப்படும்.
சர்ச்சைக்கு குறைவு இல்லாத யூ-ட்யூபர் ஜி.பி.முத்து கடந்த இரண்டு சீசன்களிலும் கலந்து கொள்ள இருப்பதாக செய்திகள் பரவின. இந்த சீசனில் நிச்சயமாக கலந்து கொள்வார் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் விக்ரம் பட வெற்றிக்குப் பின்னர், மீண்டும் கமல்ஹாசன் பிக்பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கவுள்ளார். தினம்தோறும் சண்டைகளும், அடாவடிகளும் நடக்க உள்ளதைக் காண பிக்பாஸ் ரசிகர்கள் ஆவலுடன் உள்ளனர்.
இதையும் படிங்க:திருவள்ளூர் வந்த நடிகை தீபிகா படுகோனே - காரணம் என்ன?