'எட்டு தோட்டாக்கள்' திரைப்படத்தை இயக்கிய ஸ்ரீ கணேஷ் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் 'குருதி ஆட்டம்'. இதில் அதர்வா, பிரியா பவானி சங்கர் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். ராக்போர்ட் இன்டர்நேஷனல் சார்பில் டி. முருகானந்தம் தயாரித்துள்ள இப்படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.
கடந்து ஆண்டே வெளியாக வேண்டிய இப்படம் பைனான்ஸ் பிரச்சனை காரணமாக பலமுறை வெளியீட்டு தேதி தள்ளிவைக்கப்பட்டது. இன்று (ஆகஸ்ட் 5) வெளியாகும் என்று அறிவிக்கப்பட்ட நிலையில் மீண்டும் பைனான்ஸ் சிக்கல் ஏற்பட்டது.
அதாவது பிளையிங் ஹார்ஸ் பிக்சர்ஸ் என்ற தயாரிப்பு நிறுவனம் தயாரித்த இரண்டாம் குத்து என்ற திரைப்படத்தின் விநியோக உரிமையை, ராக் ஃபோர்ட் என்டர்டெயின்மென்ட் நிறுவனம், நான்கு கோடியே 85 லட்சம் ரூபாய்க்கு வாங்கியது.
இரண்டு கோடியே 85 லட்சம் ரூபாயை கொடுத்த ராக்ஃபோர்ட் நிறுவனம், மீதமுள்ள இரண்டு கோடி ரூபாயை வழங்கவில்லை. அதற்குப் பதிலாக விநியோக உரிமையைத் திருப்பித் தருவதாகவும், படத்தின் லாபத்தில் 40 விழுக்காட்டைத் தரும்படியும், இழப்பு ஏற்பட்டால் மீதமுள்ள தொகையை திரும்பித் தருவதாகவும் ஒப்பந்தம் செய்யப்பட்டது.
அதனால் எங்களுக்கு தர வேண்டிய ஒரு கோடியே 40 லட்சம் ரூபாயை ஆண்டுக்கு 24 விழுக்காடு வட்டியுடன், ஒரு கோடியே 94 லட்சம் ரூபாயை வழங்காமல் குருதி ஆட்டம் படத்தை வெளியிடத் தடைவிதிக்க வேண்டும் என்று பிளையிங் ஹார்ஸ் பிக்சர்ஸ் நிறுவனம் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. இதனை விசாரித்த நீதிமன்றம் குருதி ஆட்டம் படத்தை வெளியிட தடை விதித்தது.
அதன் பிறகு இன்று படம் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்ட நிலையில் பேச்சுவார்த்தை நேற்று நள்ளிரவு வரை நீடித்தது. பேச்சுவார்த்தையில் பணத்தை செலுத்த ராக்போர்ட் எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் ஒப்புக்கொண்டதை அடுத்து இன்று உலகம் முழுவதும் 500க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் குருதி ஆட்டம் வெளியாகியுள்ளது.
அதர்வா சினிமா வாழ்க்கையில் இப்படம் தான் அதிகபட்ச திரையரங்குகளில் வெளியாகிள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: 'குதிரைகிட்டேயே பேசுறேன்னு ஜெயம் ரவி கிண்டல் செய்தார்..!' - கார்த்தி