மயிலாடுதுறை தரங்கம்பாடி தாலுகா, திருக்கடையூரில் தேவாரப்பாடல் பெற்ற ஸ்ரீஅபிராமி சமேத ஸ்ரீஅமிர்த கடேஸ்வரர் கோயில் அமைந்துள்ளது. இங்கு சுவாமி, அம்பாளை தரிசித்தால் நீண்ட ஆயுள் கிடைக்கும் என்பது நம்பிக்கை. இதனையடுத்து இத்தகைய சிறப்புமிக்க ஆலயத்தில் திரைப்பட இசையமைப்பாளர் இசைஞானி இளையராஜாவின் சதாபிஷேக விழா இன்று (மே.31) காலை நடைபெற்றது.
இதனை முன்னிட்டு ஆலயத்தில் அமைந்துள்ள நூற்றுக்கால் மண்டபத்தில் யாகசாலை பூஜை செய்யப்பட்டது. இசைஞானி இளையராஜாவுக்கு 80 வயது தொடங்கியதை முன்னிட்டு 'ஆயுள் விருத்தி' வேண்டி 84 கலசங்கள் வைக்கப்பட்டு, ஆயுஷ் ஹோமம், நவக்கிரக ஹோமம் மற்றும் மிருத்யுஞ்சய ஹோமம் உள்ளிட்டவை நடைபெற்றது.
இதில் மகன் கார்த்திக்ராஜா, மகள் பவதாரணி மற்றும் சகோதரர் கங்கை அமரன், மற்றும் அவரது மகன் நடிகர் பிரேம்ஜி உள்ளிட்ட குடும்பத்தினர் மற்றும் திரைப்பட இயக்குநர் பாரதிராஜா ஆகியோர் பங்கேற்றனர்.
மேலும் இளையராஜாவின் இளைய மகனும் பிரபல இசையமைப்பாளருமாகிய யுவன் சங்கர் ராஜா சதாபிஷேக விழாவில் பங்கேற்கவில்லை. அவர் திரைத்துறைக்கு வந்து 25 ஆண்டுகள் ஆகின்றன. அதனைக்கொண்டாடும் வகையில் அடுத்த மாதம் மலேசியாவில் இசைக்கச்சேரி ஒன்றை யுவன் நடத்துகிறார். அதற்கான ஏற்பாடுகளில் இருப்பதால் யுவன் சங்கர் ராஜா வரவில்லை எனக் கூறப்படுகிறது.
ஏற்கெனவே பிரதமர் மோடியை புகழ்ந்து இளையராஜா எழுதியது சர்ச்சைக்குள்ளான நிலையில், யுவன் சங்கர் ராஜா தன்னை ’கறுப்பு திராவிடன், பெருமைமிகு தமிழன்’ என ட்விட்டரில் பதிவிட்டார். யுவன் சங்கர் ராஜா தனது மனைவியாக இஸ்லாமியப் பெண்ணை மணமுடித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: SK 20 ரீலிஸ் தேதி அறிவிப்பு- ட்ரெய்லர் விரைவில்!