சென்னை: அறிமுக இயக்குநர் ஜாக் ஹாரிஸ் இயக்கத்தில் கதிர், ஆனந்தி, பவித்ரா லட்சுமி உள்ளிட்டோர் நடித்துள்ள 'யூகி' படத்தின் இசை மற்றும் ட்ரெய்லர் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இவ்விழாவில் கதிர், பவித்ரா லட்சுமி, ஆனந்தி, நட்டி, நரேன், தயாரிப்பாளர் பிரபு திலக் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
விழாவில் பேசிய நடிகர் நரேன், "எனக்கு நிறைய போலீஸ் கதாபாத்திரம்தான் வருகிறது. இது எனது முதல் இருமொழி படம். முதலில் இப்படத்தை நான் ஒப்புக்கொள்ளவில்லை. கதை கேட்டபிறகு ஓகே சொல்லிவிட்டேன். இறுதிவரை த்ரில்லிங்காக போகும்.
அதுதான் இப்படத்தின் ப்ளஸ். கொஞ்சம் பயமாகத்தான் இருந்தது. திரையரங்கு வெளியீட்டுக்காகவே எடுக்கப்பட்ட படம் இது. 'சித்திரம் பேசுதடி' படம் நடித்தபோது, அப்படத்திற்கு திரையரங்குகள் கிடைக்காமல் அழுதுகொண்டு இருந்தேன். ஒரு படத்திற்கு திரையரங்குகள் கிடைப்பது எவ்வளவு கஷ்டம் என்பது எனக்குத் தெரியும். அதனால் அனைவரும் திரையரங்கில் சென்று படம் பார்க்க வேண்டும்" என்று தெரிவித்தார்.
கயல் ஆனந்தி கூறுகையில், "இப்படம் எனக்கு மிகவும் நெருக்கமான படம். இப்படத்தில் நடிக்கும் போது நிஜமாகவே நான் கர்ப்பமாக இருந்தேன். மிகவும் அழுத்தமான கதை இது. ரொம்ப நல்ல படமாக இருக்கும். மலையாளம் பேசி நடித்தது சவாலாக இருந்தது. ஒரு கதையை இரண்டு மணி நேரம் கேட்டபிறகுதான் நடிக்க சம்மதிப்பேன். இக்கதையை போனில் கேட்ட ஒரு மணி நேரத்திலேயே ஓ.கே. சொல்லிவிட்டேன்" என்றார்.
நட்டி நட்ராஜ் பேசும்போது, "இந்த மாதிரியான படங்களுக்கு வெளியில் இருந்து வரும் சப்போர்ட் குறைவாகத்தான் இருக்கும். மொத்த படமே கஷ்டம் தான். இரண்டு மொழிகளில் செய்துள்ளோம். கரோனா தான் கஷ்டமாக இருந்தது. வாடகைத் தாய் மட்டுமே பிரச்னை இல்லை. உறவுகள் போன்ற பிரச்னைகளும் இதில் இருக்கும்" என்றார்.
விழாவில் பேசிய நடிகர் கதிர், "கரோனா காலத்தில் நான் கேட்ட கதை தான் இது. வாடகைத்தாய் சம்பந்தப்பட்ட கதை. சுழல் படத்திற்குப் பிறகு போலீஸ், க்ரைம் த்ரில்லர் கதைகளைக் கேட்க வேண்டாம் என்று இருந்தேன். நடிக்க வேண்டாம் என்ற முடிவுடன்தான் இக்கதையை கேட்டேன். ஆனால், இறுதியில் நடிக்க ஒப்புக் கொண்டேன்" என்று கூறினார்.
நடிகை பவித்ரா லக்ஷ்மி கூறுகையில், "எனக்கு இந்தப்படம் ரொம்ப ஸ்பெஷல். இரண்டு மொழிகளில் படம் பண்ணும் வாய்ப்பு கிடைத்துள்ளது. நான் மிகவும் பாக்கியசாலி. முதல் படத்தில் இருந்து நான் வேலை செய்த அனைவரும் மிகவும் அனுபவசாலிகள். இப்போதுதான் நடிக்க வந்துள்ளேன். டிவியில் இருந்து வந்துள்ளேன். கிட்டத்தட்ட ஒரு புதுமுகம் மாதிரிதான். நன்றி சொல்வதைத் தவிர வேறு வார்த்தை இல்லை" என்றார்.
இதையும் படிங்க: "கொல்லிமலையில் நடந்த உண்மை சம்பவம்தான் 'நாடு'" - இயக்குநர் சரவணன்